
கஜா புயலை நாங்கள் கூஜாவாக்கி அனுப்பிவிட்டோம்!’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீசையை முறுக்கியிருக்கிறார். ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களே சிலிரித்துப் பாராட்டுமளவுக்கு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருந்துள்ளதாக தகவல்கள் வந்து குவிகின்றன.
இந்நிலையில், வெகு சில அரசியல் பிரபலங்கள் மட்டும் கஜா விஷயத்தில் அரசை உரசிப் பார்க்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் எம்.எல்.ஏ.கருணாஸ். அரசின் நடவடிக்கைகளை ‘வெறும் பில்டப்’ என்றிருக்கிறார் லொடுக்கு. ஏன்? என்று விசாரித்தால், எல்லாம் சசிக்கு கொடுக்கின்ற மரியாதையின் விளைவுதான்! என்கிறார்கள்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது, எந்த கட்சியையும் கூட்டணிக்கு சேர்த்துக் கொள்ளாமல், தன் செல்வாக்கு தைரியத்தில் தில்லாக தனித்து களமிறங்கினார் ஜெயலலிதா. ஆனாலும் இஸ்லாமியர் வாக்கு வங்கியை வளைக்க தமீமுன் அன்சாரிக்கும், தேவர் வாக்கு வங்கியை வளைக்க கருணாஸுக்கும், கவுண்டர் சமுதாய வாக்குகளை அள்ள தனியரசுக்கும் வாய்ப்பு கொடுத்து கூட்டணியில் சேர்த்தார்.
தனியரசு ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தமீமுன் அன்சாரியோ ஜவாஹிருல்லாஹ் உடன் பல வருடங்கள் அரசியல் களத்தில் இருந்தவர். ஆனால் கருணாஸோ அப்போதுதான் ‘முக்குலத்தோர் புலிப்படை’ எனும் அமைப்பை துவக்கி இருந்தார். ஆனாலும் அவருக்கு சீட் கிடைக்க காரணம் சசிகலாவின் செல்வாக்குதான். இந்த மூன்று பேருமே இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றனர்.
ஆனால் ஜெ., மரணத்துக்குப் பின் அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசு கண்ட கடின நிகழ்வுகள் உலகத்துக்கே தெரியும். பிரச்னை உச்சம் சென்ற நிலையிலும், ‘நான் சின்னம்மாவின் விசுவாசி. எந்த நிலை வந்தாலும், மாற மாட்டேன்.’என்று உரக்க கூறினார் கருணாஸ். அதை அப்படியே ஃபாலோ பண்ணவும் செய்தார். சமீபத்தில் கூட எடப்பாடியார் மற்றும் அரசுக்கு எதிராக வன்முறையான வார்த்தைகளை கூறினார் என்ற அடிப்படையில் கைதாகி, சிறை சென்று வந்தார். ஆனாலும் இவ்வளவுக்கு பிறகும் தன் சின்னம்மா விசுவாசத்தை மாத்திக்கவில்லை கருணாஸ்.
இப்போது கஜா புயலை சமாளிக்கும் விஷயத்தில் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லோரும் பாராட்டும் வேளையிலும், “இந்த அரசுக்கு எதிரான கருத்துக்களைத்தான் நான் தெரிவிப்பேன். இதனால் பிரச்னைகள் வரும், பரவாயில்லை. தமிழகத்தில் கஜா புயலுக்கு கடந்த மூன்று நாட்களாக அதிகமாக வெறும் பில்டப்புகளை மட்டும்தான் கொடுத்து வருகிறது இந்த அரசு. விமானம் எங்கு செல்கிறது? எப்படி பறக்கிறது? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
ஆனால் கஜா புயல் விஷயத்தில் வெறும் பில்டப்பை மட்டுமே தமிழக அரசு காட்டியது.” என்று காய்ச்சி கொட்டியிருக்கிறார். புயல் விஷயத்தில் எடப்பாடி அரசு ஸ்கோர் செய்தது, பரப்பன சிறையில்லிருக்கும் சசிகலாவின் காதில் விழ, டென்ஷனானாராம். தினகரன் கூட அரசை பாராட்டியதை சசி சகிக்கவில்லை. ஆனால் அதேவேளையில், கருணாஸ் இப்படி அரசை விமர்சித்திருப்பது சசியை குஷியாக்கியிருக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் லொடுக்கு குமாரா!