முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெருக்கும் ஊழல் வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 17, 2021, 4:25 PM IST
Highlights

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீடு விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. அதாவது, நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ஹேமலதா வாசித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது இறந்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும். எனவே மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவித பலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், ராஜேந்திர பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மனுவில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது  வழக்கை 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

click me!