கோவில் நிலத்தை ஆட்டையை போட்டு காம்ப்ளக்ஸ் கட்டிய மாஜி அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள்.. இடித்து தள்ளிய அரசு..!

By vinoth kumarFirst Published Jul 4, 2021, 1:04 PM IST
Highlights

முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடித்து தள்ளப்பட்டது. 

முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடித்து தள்ளப்பட்டது. 

சிவகங்கையில் மேலூர் சாலையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 9.58 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினரான சரவணன் என்பவர் ஆக்கிரமித்ததாக திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத்துறை அமைச்சருக்குப் புகார் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், ஜூன் 19-ம் தேதி அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகக் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்தனர். அதைத் தொடர்ந்து கட்டிடத்தை ஜூன் 30-ம் தேதிக்குள் இடித்து அகற்ற வேண்டுமென சரவணனுக்கு அறநிலையத் துறை சார்பில் ஜூன் 23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உறவினரின் கட்டிடத்தை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர் அகற்றவில்லை என்றால், அறநிலையத் துறை அதிகாரிகளே அகற்றி, அதற்குரிய தொகையைச் சம்பந்தப்பட்டவரிடம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் வணிக வளாக கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. மொத்தமுள்ள மூன்று கட்டிடங்களில், ஒரு கட்டிடம் 3 தளங்களுடன் மற்றவை இரண்டு தளங்களும் பில்லர் அமைக்கும் பணி முடிந்து காங்கிரீட் மட்டும் போடப்பட்டிருந்தது. ஜேசிபி எந்திரம் மூலமாக மூன்று கட்டிடங்களையும் இடிக்கும் பணி, சுமார் 2 மணி நேரம் நடந்தது. அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. 

click me!