குளு குளு வசதியுடன் மின்சார பேருந்து... அசத்தும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

By vinoth kumarFirst Published Aug 26, 2019, 2:29 PM IST
Highlights

தமிழகத்தில் முதல்முறையாக மாநகர போக்குவரத்து கழகத்தின் முதல் மின்சார பேருந்து சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். 

தமிழகத்தில் முதல்முறையாக மாநகர போக்குவரத்து கழகத்தின் முதல் மின்சார பேருந்து சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். 

போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை குறைக்கவும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டும் மின்சார பேருந்து சேவையை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான செலவு மிகவும் குறைவு என்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்திலும் மின்சார பேருந்துகளை சென்னையில் இயக்க போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டமிட்டார்.

 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும் லண்டன் மாநகரத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் c-40 முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா முழுவதுமான 64 நாகரங்களுக்கு 5595 பேருந்துகளை இயக்க மத்திய அரசின் FAME INDIA திட்டத்தின் கீழ் பேருந்துகளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு 525 மின்சார பேருந்துகளை வாங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்தை தமிழகத்தில் கொண்டு வர போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெரும் பங்காற்றியுள்ளார். 

இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தினர் 2 மின்சார பேருந்துகைள மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தயாரித்து கொடுத்துள்ளனர். 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் குளு குளு வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மின்சார பேருந்து இன்று தலைமை செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தவிழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, மின்சார பேருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து பயணம் செய்தனர். இந்த பேருந்தில் 32 பேர் அமரும் வகையிலும், 22 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். மின்சார பேருந்துகள் பல்லவன் இல்லத்தில் ரீசார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வரை இப்பேருந்து இயங்கும். குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பேருந்தில் தானியங்கி கதவுகள் வழித்தடங்களில் அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை வரையிலும் மின்சார பேருந்துகளை இயக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களில் மேலும் 100 மின்சார பேருந்துகளை சென்னையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

click me!