வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் பட்ஜெட்.. திமுகவை விளாசும் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Feb 20, 2024, 1:54 PM IST

2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.


அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்று என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.

Tap to resize

Latest Videos

அதிமுக அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா ? என்றால் இல்லை. 

* எங்களுடைய ஆட்சிக் காலத்தில் கொரோனா பாதித்த 2020-2021ஆம் ஆண்டைத் தவிர, மற்ற ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் 2021-22ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடி.

* 2022-23 திருத்த மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறையை ரூ. 30,476 கோடியாகக் குறைத்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டது திமுக அரசு. ஆனால், இப்போது 2022-23க்கான கணக்குகள்படி அது ரூ. 36,215 கோடியாக உயர்ந்துள்ளது. 

*  2023-24ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 37,540 கோடியாக இருக்கும் என்று கூறினீர்கள். ஆனால், அது திருத்த மதிப்பீட்டில் ரூ. 44,906 கோடியாக உயர்ந்துவிட்டது.

*  2024-2025ஆம் ஆண்டிற்கு திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 49,278 கோடியாக உயரும் என காட்டப்பட்டுள்ளது. இதுவும் திருத்த மதிப்பீட்டில் எவ்வளவு உயரும்; இறுதி கணக்குகள்படி எவ்வளவு உயரும் என்பது கேள்விக்குறியே.

*  எனவே, வருவாய் பற்றாக்குறையை முழுமையாக அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறையை உயர்த்திக்கொண்டே செல்கிறது திமுக அரசு.

இதில், திமுக அரசு கூறியபடி நிதி மேலாண்மைத் திறன் எங்கே உள்ளது? அதேபோல், நிதிப் பற்றாக்குறை

*  2021-22ல், ரூ. 60,481 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2024-25ல் ரூ. 1,08,681 கோடியாக உயர்ந்துவிட்டது. கடனை குறைப்போம் என்று சொன்ன விடியா திமுக அரசு அதையும் குறைக்கவில்லை.

*  ஒரே ஆண்டில், அதாவது 2021-22ம் ஆண்டில் ரூ. 84,747 கோடி நிகரக் கடனாகவும்; 2022-23ம் ஆண்டு ரூ. 73,957 கோடி நிகரக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டு ரூ. 90,369 கோடி நிகரக் கடன் பெற உள்ளதாக திருத்த மதிப்பீடு கூறுகிறது. அதே நிகரக் கடனாக 2024-25ல் ரூ. 1,04,318 கோடி பெறப்பட உள்ளது.

*  ஆக, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கு ஆண்டுகளுக்கு (மார்ச், 25) ரூ. 3,53,391 கோடி கடன் சுமை தமிழக மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டு இறுதியில் நிகர கடன் அளவு ரூ. 8,33,362 கோடியாக உயரும் என்று திமுக அரசு கூறி உள்ளது.

*  அனேகமாக, விடியா திமுக ஆட்சி 5 ஆண்டுகள் முடிவடையும்போது தமிழகத்தின் கடன் தொகை ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

*ஆக, நாங்கள் விட்டுச்சென்ற போது தமிழக அரசு அதுவரை பெற்ற கடன் அளவை, ஐந்தே ஆண்டுகளில் இரட்டிப்பாக ஆக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக அரசின் நிதி மேலாண்மைக்குச் சான்று.

* நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பெறப்பட்ட கடன் மூலதன செலவிற்கு செலவிடாமல், வருவாய் செலவினத்திற்கு செலவிடப்படுகிறது என்று திமுக குறை கூறியது. ஆனால், விடியா ஆட்சியில் பெறப்படுகின்ற கடன், மூலதன செலவிற்கு மட்டுமா செலவிடப்படுகிறது?

1.  2021-2022ல், பெறப்பட்ட நிகரக் கடன் ரூ. 84,740 கோடி. ஆனால், விடியா திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 37,010 கோடிதான்.

2. 2022-23ல் பெறப்பட்ட நிகரக் கடன் ரூ. 73,957 கோடி. ஆனால், திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 39,529 கோடிதான்.

3.  2023-24ல் திருத்த மதிப்பீட்டில் பெறப்பட்ட நிகரக் கடன் ரூ.90,369 கோடி. ஆனால், விடியா திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 42,531 கோடிதான்.

4. 2024-25ல் மூலதனச் செலவு 47,681 கோடி. ஆனால், பெறப்படும் கடனோ 1,04,318 கோடி. இதில் மீதி செலவை வருவாய் செலவினங்களுக்குத்தானே செலவிடப்படுகிறது. இதில் என்ன நிதி மேலாண்மை?

*  இந்த ஆண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவு 2025-26ல் ரூ. 66,753 கோடி என்றும், 2026-27ல் 96,793 கோடி என்றும் கணித்துள்ளீர்கள். இது சாத்தியமா?

*  நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து 2021-22ல் ரூ.60,481 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2024-25ல் 1,08,689 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் விடியா திமுக அரசின் திறமையான நிதி மேலாண்மையா?

முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும்போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ் நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, விடியா திமுக அரசின் திராவிட மாடல் சாதனை என்று சொல்ல முடியாது. உதாரணமாக 

*  இந்திய பொருளாதாரத்திற்கு 9 சதவீத பங்களிப்பை தமிழ் நாடு தருவதாகவும், அதை தனது அரசின் சாதனையாகக் கூறுகிறார். தமிழ்நாடு பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்திற்கு சுமார் 9 சதவீத பங்கைத் தருகிறது. அதில் இந்த மூன்று ஆண்டுகளில் ஏதேனும் அதிகரித்துள்ளதா என்றால் இல்லை. எனவே, இது தமிழ் நாட்டின் சாதனை என்று சொல்லலாமே தவிர, திமுக அரசின் சாதனை என்று கூற முடியாது.

*  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் இருப்பது இந்த மூன்று ஆண்டில் நடந்த சாதனை அல்ல. தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் என்ன சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது? 

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.24 சதவீதம் என்று இருக்கம்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 சதவீதம் என்று கூறியுள்ளார். ஓரிரு ஆண்டுகளை தவிர கடந்த பல ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வளர்ச்சி இந்திய வளர்ச்சியைவிட அதிகமாகத்தான் உள்ளது. இதே திமுக-வின் ஆட்சிக் காலமான 2021-2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம். ஆனால், தமிழ் நாட்டின் வளர்ச்சி 7.92 சதவீதம்தான்.

எனவே, தொடர்ச்சியாக தமிழ் நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். அதுவும், நமக்குப் போட்டியாக உள்ள மாநிலங்களை ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, நம்மைவிட முன்னேற்றம் அடைந்துள்ள மகாராஷ்டிராவின் வளர்ச்சி விகிதம் 2021-2022ல் 9.13 சதவீதம். நமது இடத்தைப் பிடிக்க போட்டியாக அடுத்த நிலையில் உள்ள உத்தரப் பிரதேச வளர்ச்சி விகிதம் 10.20 சதவீதம். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 10.56 சதவீதம். கர்நாடகாவின் வளர்ச்சி விகிதம் 10.96 சதவீதம். ஆனால். தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் அந்த ஆண்டில் 7.92 சதவீதம்தான். அதனால்தான் நான் கூறினேன்.  இந்த மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை நாம் பெற்றால்தான், நமது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

* பணவீக்கம் இந்திய அளவில் 6.65 சதவீதம் என்றும், தமிழ் நாட்டில் 5.97 சதவீதம் என்றும் குறிப்பிட்டு, அதை 4-ஆவது சாதனையாகக் கூறுகிறார். பொதுவாக, பணவீக்கம் மத்திய அரசின் கொள்கைகளைச் சார்ந்தது. தமிழ் நாட்டில் பணவீக்கம் எப்போதும் பிற மாநிலங்களைவிட குறைவாகவே இருக்கும். இது, ஸ்டாலின் அரசின் சாதனை என்று கூறிக்கொள்ளும் அளவிற்கு, அவர் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாரா என்பதுதான் கேள்வி?

*  கல்வியில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியது ஒரு சாதனை என்று கூறுகிறார். அதற்கு, இவர் மட்டுமா காரணம் ? கடந்த 3 ஆண்டுகளில் இந்நிலையை எட்டிவிட்டாரா? தமிழ் நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக அரசின் கொள்கைகளும், திட்டங்களும், கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

இப்படி பிறருடைய சாதனைகளை, குறிப்பாக அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்று. 

இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்:

2021 சட்டமன்றத் தேர்தலின்போது அள்ளி வீசிய, இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. (கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்துதல், டீசல் மானியம், கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவருதல், பழைய ஓய்வூதியம் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்)

click me!