
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்று கடந்த சில வருடங்களுக்கு முன் பெயரெடுத்த அ.தி.மு.க. இப்படியொரு மோசமான நிலைக்கு ஆளாகுமென்று எந்த அரசியல் விமர்சகரும் நினைத்திருக்க மாட்டார். ஏதோ ரியல் எஸ்டேட் அலுவலகம் துவங்குவது போல் ஆளாளுக்கு பூஜை போட்டு தனித்தனி அணியாய் பிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் அக்கட்சியை. அந்த வகையில் சமீபத்தில் ‘அம்மா அணி’க்கு தனி அலுவலகம் போட்டு ஜெர்க் கொடுத்திருக்கிறார் திவாகரன்.
இந்நிலையில் தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையில் உருவாகியிருக்கும் இந்த மோதல் மிகப்பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்களில் சிலரோ இந்த மோதலானது எடப்பாடி அணிக்கு சாதகமானது என்கிறார்கள். வேறு சிலரோ இது பெரும் நாடகம்! என்கிறார்கள்.
இந்நிலையில் திவாகரன் மற்றும் தினகரன் இடையில் சண்டை மூள்வதற்கு மூல காரணமே தினகரனின் உதவியாளர் ஜனா!தான் என்கிறார்கள். அதாவது ஒரு நாள் மிக முக்கிய தகவலொன்றை தினகரனிடம் சொல்வதற்காக முயன்றிருக்கிறார். அவர் லைனில் கிடைக்காத நிலையில், ஜனாவுக்கு போன் போட்டு அது தொடர்பாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். ஆனால் ஜனாவின் பதிலும், அதன் பிறகு அவரது செயல்பாடுகளும் மரியாதையான கோணத்தில் இல்லையாம். இதில் திவாகரனுக்கு கடும் கடுப்பாம்.
இதைப் பற்றி தினகரனிடம் கூறியபோதும் அவரிடமிருந்தும் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவுமில்லை. இந்த விவகாரம் அப்படியே இழுத்துக் கொண்டே போனது அதன் பிறகு உள்ளுக்குள்ளேயே பல முட்டல் மோதல் உரசல்கள் உருவாகியிருக்கின்றன. அதன் இறுதி விளைவே தினகரனும், திவாகரனும் வெளிப்படையாக மோதிக் கொண்டது என்கிறார்கள்.
ஆக இந்த பிளவுக்கு மூல காரணமாக காட்டப்படும் ஜனாதான் தினகரனிடமிருந்து நாஞ்சில் சம்பத் பிரிந்து போகவும் காரணம் என்று சொல்லப்படுகிறது. யாரையும் பெரிதாய் மதிக்காமல் நடக்கும் அவரது போக்கால், தினகரனுக்கு அருகிலிருக்கும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு தினகரனை தனிமரமாக்காமல் விடமாட்டார், தினகரனுக்கு பிரச்னை வெளியில் இல்லை! அவரோடேதான் இருக்கிறது என்று ஜனாவை சுட்டிக் காட்டுகின்றனர்.
இது எங்கே போய் முடியுமோ?!