
அயோத்தியா மண்டபம்- கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்ட பேரவை கூட்டமானது நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரம் இல்லா நேரத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்தியது குறித்து வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 2004 ம் ஆன்டிலிருந்து அயோத்தியா மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததாக கூறினார். 2013 ஆண்டில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்த போது தடை ஆணை பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் தக்கார் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமலுக்கு கொண்டுவர இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நேற்று சென்ற போது ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பக்தர்கள் பணம் சுரண்டப்படுகிறது
ஏற்கனவே நியமிக்கப்பட்ட தக்கார் வாயிலாக இந்து சமய அறநிலைய துறை அயோத்தியா மண்டபம் கைபற்றியதாகவும் தெரிவித்தார். பக்தர்களின் பணத்தை ஒரு கூட்டம் சுரண்டுவதாகவும் குற்றம்சாட்டினார். 95ஆயிரத்து 590 அர்சகர்கள் மற்றும் பணியாளர்கள் இதுவரை பணி வரன்முறை படுத்தபடவில்லையென்றும் தெரிவித்தார். அரசின் மீது மாயபிம்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைத்தால் அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முதல்வர் அஞ்சமாட்டார் என்றும் நீதிமன்ற தீர்ப்பின் படி தான் இந்து சமய அறநிலைய துறை செயல்படும் என கூறினார்.
கட்சியை பலப்படுத்த முடியாது- முதல்வர்
தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களை நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றைத் தீர்க்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் மாநில அரசுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிலைமை குறித்து தான் நேரில் வலியுறுத்தியதாகவும் இதனை பெற்றுத் தரவேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும் தேவையற்ற அரசியலை புகுத்தி அதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது தமிழகத்தில் நடக்காது எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.