பாஜகவுக்கு பயம்..! உரத்தக் குரலில் எழுதுகிறேன், பேசுகிறேன்.. 'பயம்’ குறித்த கேள்விக்கு ப. சிதம்பரம் பளீச்.!

By Asianet TamilFirst Published May 31, 2022, 7:29 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு பாஜக அரசு பயப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கிய ஓரிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் போட்டியிடுகிறார். ப. சிதம்பரம் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு ஆதரவு அளித்த அனைத்து தோழமைக் கட்சிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இங்கு குழுமியுள்ளனர். காங்கிரஸ் முன்னாள், இந்நாள் தலைவர்கள் எல்லோருமே இங்கு வந்திருக்கிறார்கள். இது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 

இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் சொன்னேன். அவரும் தன்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார். ஜூன் 3ஆம் தேதிக்குப் பிறகுதான் தேர்தல் உண்டா, இல்லையா என்பது தெரிய வரும். மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை பற்றியெல்லாம் நான் புதிதாக கருத்து சொல்ல அவசியம் இல்லை. இரு நாட்களுக்கு முன்னால் நடிகர் ஷாருக் கானின் மகன் வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஜார்க்கண்ட் முதல்வர் குற்றம் சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இதை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.

சாதாரண மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். என்னைப் பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா, புலியா? நான் காங்கிரஸ் கட்சியைப் பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக உரத்தக் குரலில் எழுதியும் சொல்லியும் வருகிறேன். ஆனால், என்னைப் பார்த்து பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. என்னைப் பார்த்து பயப்படுவதாக பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டுதான் அவர்கள் (பாஜக) அஞ்சுகிறார்கள். வேட்பாளர்களை நான் தேர்வு செய்யவில்லை. கட்சிதான் தேர்வு செய்தது. இந்தியாவில் காங்கிரஸில் என்னை விட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், வேட்பாளர் தேர்வு குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?” என்று ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 

click me!