கருணாநிதி சமாதிக்கு வந்த அந்த வயதானவர்களை கட்டி அனைத்து, காலில் விழுந்த மு.க. தமிழரசு, செல்வி!

By Maruthu Pandi Santhosam  |  First Published Dec 22, 2018, 7:23 PM IST

மெரினா கடற்கரையில் தனது தந்தையின்(கருணாநிதி) நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திய வயதான இருவரது காலில் விழுந்து கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி ஆசீர்வாதம்  வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.


இது தொடர்பாக என்ஜினீயர் சீனிவாசன் என்பவர் தனது ஃ பேஸ்புக் பதிவில்;    ஒவ்வொரு 6 மாதத்திற்கு, வழக்கமாக மூன்று நான்கு டாக்டர்களிடம் பரிசோனை செய்து கொள்ள என் அப்பாவும் அம்மாவும் சென்னை வருவார்கள்.. அப்படிதான் இந்த முறையும் வந்தார்கள்.. ஆனால் வந்து இறங்கியவுடன் என் அப்பாவும் அம்மாவும் "டாக்டரை பார்க்கறமோ இல்லையோ முதலில் கலைஞர் ஓய்வகம் செல்ல வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.. ஆனாலும் முதலில் அவர்களை டாக்டர்களிடம் இந்த வாரம் முழுக்க காட்டிவிட்டு, இன்று ஊருக்கு திரும்ப டிக்கெட் போட்டுவிட்டேன்..

கலைஞர் ஓய்வகம் கூட்டி செல்லவில்லை என்று முந்தாநாள் எங்கப்பா என்னிடம் மிகவும் கோவித்துக் கொண்டார். அவரிடம் நாளை கூட்டி செல்கிறேன் , அதாவது நேற்று கூட்டி செல்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு, நேற்று இரவு சுமார் 7 மணிக்கு கூட்டி சென்றேன். கலைஞர் ஓய்வகம் சென்றவுடன் என் அம்மாவும் அப்பாவும் கலைஞரை வணங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை தேற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒதுங்கி நின்றோம்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது அங்கிருக்கும் ஒரு கட்சிக்காரர் எங்களிடம் வந்து "சார், தலைவர் குடும்பத்திலிருந்து வராங்க..கொஞ்சம் அப்படி ஓரமா செல்லுங்கள்" என்று சொன்னார். "ஓ அப்படியா" என்றவுடன், "ஆமாம் சார், தினமும் செல்வி அக்காவும் தமிழரசு அண்ணனும் வந்து ஒரு அரை மணி நேரம் இங்கு அமர்ந்து விட்டு செல்வார்கள்" என்றார்.. எனக்கு ஆச்சர்யம்.."அவர்கள் வரும்போது கெடுபுடி இருக்கலாம், நாம் செல்லலாம்" என்று அப்பாவிடம் சொன்ன போது, "இருடா, தூரமா நின்னு, தலைவர் புள்ளைங்களை பார்த்துவிட்டு செல்லலாம்" என்று ஏறக்குறைய கெஞ்சினார். வயதாகி விட்டதால் அவர்களால் அங்கு அதிக நேரம் நிற்க முடியாது என்று சொல்லி அண்ணா சமாதி அருகில் இருக்கும் நிழற்குடையின் அடியில் நின்று கொண்டிருந்தோம்..

5 நிமிடத்தில் ஒரு கார் நேராக நாங்கள் இருக்கும் இடத்தில் வந்து நின்றது. அதிலிருந்து செல்வி அக்கா, தமிழரசு அண்ணன், அவர் மனைவி மூவரும் இறங்கினர். யாரும் செக்யூரிட்டி கிடையாது. அவர்களை பார்த்து, என் அப்பா கையெடுத்து கும்பிட்ட்டவுடன், தமிழரசு அவர்களும் செல்வி அக்காவும் நேராக என் அப்பாவிடம் வந்து, "ஐயா, எங்கிருந்து வரீங்க?" என்று கேட்டனர்.. அவர்," சேலத்திலிருந்து வருகிறோம்" என்று சொல்லும் போது, அருகில் இருந்த என் அம்மா சட்டென்று கடகடெவென்று அழ தொடங்கினார். அதை கண்டு என் அப்பாவும்.. இதை பார்த்தவுடன் செல்வி அவர்களும் தமிழரசு அவர்களும் சேர்ந்து அழ தொடங்கினர்.

"நீங்க தான் எங்களை சமாதானப்படுத்தனும், நீங்களே அழுறீங்களே" என்று செல்வி அக்கா அவர்கள் என் அம்மாவை கட்டி அனைத்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார். உடனே நான், "அப்படி இல்லைங்க அக்கா, 100 ரூபாய் சம்பளம் வாங்கிய அவர் 83 வயதில் இன்று 35 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குவது கலைஞர் ஒவ்வொரு ஊதியக்கமிஷனிலும் சம்பள உயர்வு கொடுத்த காரணம் தான், அந்த நன்றிக்காகத்தான் இந்த அழுகை" என்று நான் குரல் கம்மி சொன்ன போது, தமிழரசு அவர்கள்," நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று என்னைப்பார்த்து கேட்டார்.

"நான் எஞ்சினியர், சென்னையில் ஒரு ஜெர்மன் கம்பெனியில் ரீஜினல் மேனேஜராக வேலைப்பார்க்கிறேன்.நான் எஞ்சினியராக காரணம் கலைஞர் கொடுத்த 20 சதவீத இட ஒதுக்கீடு, என் இரு அக்காக்களும் ஆசிரியராக வேலை பார்க்கிறார்கள். அது கலைஞர் கொடுத்த 20 சதவீத சமூக ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு அதுவுமில்லாமல் employment அலுவலக சீனியாரிட்டிபடி ஆசிரியர் வேலை கொடுக்க வேண்டுமென்ற கலைஞரின் உத்தரவு.. என் மனைவி எஞ்சினியர்..அதுக்கும் கலைஞர் தான் காரணம். இப்படி எங்க வீட்டில் உள்ள அனைவரும் நல்ல நிலைமையில் இருக்க காரணம் தலைவர் தான்.

அவரு உங்களுக்கு வேணும்னா அப்பாவா இருக்கலாம்.. ஆனா எங்களை பொறுத்த வரையில் கலைஞர் எங்களை வாழ வச்ச குலசாமி" என்று தழுதழுத்த குரலில் கண்கள் கலங்கியபடி சொன்னவுடன், செல்வி அக்கா அவரின் கையை காட்டி நீங்க சொல்ல சொல்ல எனக்கு எப்படி சிலிர்க்கிறது என்று பாருங்கள் என்று பயங்கரமாக அழ ஆரம்பித்து விட்டார். கூட தமிழரசுவும்.

பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று என் அப்பா அம்மா இருவரையும் ஒரு சேர நிற்க வைத்து காலில் விழுந்து "வாழ்த்துங்கள்" என்று சொன்னார்கள். ஐயோ அது ஒரு ரியல் goosebumps. தன் அப்பா சாதாரண ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரானாலே மிகப்பெரிய பந்தா காட்டும் இந்த உலகில், இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த, பல பிரதமர்களையும், ஜனாதிபதியையும் உருவாக்கிய ஒரு மாஸ் தலைவரின் பிள்ளைகள், யாரோ ஒரு Stranger காலில் அதுவும் ஒரு Public இடத்தில் விழுந்து வாழ்த்துக்கள் வாங்குவது எல்லாம் இந்த உலகம் கண்டிராத அதிசயம். அந்த நொடிகள் எங்கோ வானத்தில் பறப்பதை போன்ற உணர்வு.

கலைஞர் அவர் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கிறார் என்று வியக்கும் தருணம் அது. அவர்கள் அப்படியே எங்களை பார்த்து புன்னகைத்து சென்றிருந்தால் கூட அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருப்போம்.. ஆனால் கலைஞரின் தொண்டர்களை தங்கள் குடும்பம் போல் அவர்கள் நினைப்பதுதான் மிகச்சிறப்பு.

அதன் பின் புகைப்படம் எடுத்துக் கொண்டு, செல்வி அக்கா, என் அம்மாவை பார்த்து, "ஊருக்கு எப்போ கிளம்புறீங்க அம்மா?" என்று கேட்டார். "நாளை செல்கிறோம்" என்று சொன்னவுடன் என்னை பார்த்து, "அடுத்த முறை அவர்கள் சென்னை வரும் போது கண்டிப்பாக வீட்டுக்கு கூட்டி வாருங்கள், மறந்து விடாதீர்கள்" என்று மிக அழுத்தமாக கூறி, "ரொம்ப பனியா இருக்கு, பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க" என்று வாஞ்சையோடும் கனிவோடும் கூறினார்.

இதை விட வேறு என்ன வேண்டும்.. என் அப்பா மகிழ்ச்சி, நெகிழ்ச்சியில் உச்சிக்கே சென்று விட்டார். "தலைவரை தான் நேரில் பார்க்க முடியாம போச்சி, தலைவரின் பிள்ளைகளை பார்த்துட்டோம், அதும் மிக அன்பாக பார்த்துவிட்டோம், இதை விட வேறு மகிழ்ச்சி இருந்துவிட போகிறது" என்று கசிந்துருகினார். என் அம்மா வீடு சென்ற பிறகும் அழுகையை நிப்பாட்ட வில்லை.

திமுக குடும்ப கட்சி, குடும்ப கட்சி என்று விமர்சனம் வைக்கிறார்கள்.. ஆமான்டா! திமுக குடும்ப கட்சி தான். யாரோ அறிமுகமில்லாத ஒருவரை கூட தன் அப்பா அம்மா ஸ்தானத்திற்கு வைத்து அன்பை காட்டும் போது நிமிர்ந்து சொல்வோம்டா திமுக ஒரு குடும்ப கட்சி தான் என்று! இவ்வாறு அந்த பதிப்பில் உள்ளது.

click me!