ஊடகங்கள் குளருபடி செய்தனவா ? எக்ஸிட் போல் வெளியீட்டில் தொடரும் சர்ச்சை !!

By Selvanayagam PFirst Published May 22, 2019, 8:02 AM IST
Highlights

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் உண்மையானது தானா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த, அடுத்த சில நிமிடங்களிலேயே, பாஜக-தான் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கார்ப்பரேட் ஊடகங்கள் கணிப்புக்களை வெளியிட்டன.

இந்த கணிப்புக்கள், எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும், கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துக் கணிப்பில் ஏகப்பட்ட தகவல் பிழைகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.‘

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்புதான், பாஜக-வுக்கு மிகஅதிகளவிலான இடங்களை வாரி வழங்கியுள்ளது. ஆனால், அதில் ஏராளமான தகவல் பிழைகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலத்தின் 5 மக்களவைத் தொகுதிகளின் பெயர்களும் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளன. அதாவது இல்லாத தொகுதிகளைக் குறிப்பிட்டு,அந்த 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டிலிருக்கும் மத்திய சென்னை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொகுதியில் போட்டியிடுவது திமுக. அப்படியிருக்க காங்கிரஸ் வேட்பாளர் எப்படி வெற்றி பெறுவார்? என்பதைக்கூட சரிபார்க்க நேரமில்லாமல் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதும், 10 நிமிடங்களிலேயே கருத்துக் கணிப்பு தகவல்களை ‘இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனங்கள் நீக்கவும் செய்துள்ளன. ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில ஊடகம் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் உத்தர்கண்ட் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை விட ஆம் ஆத்மி கட்சி சிறப்பு வாக்குகளை பெறும். அதாவது 2.9 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சியினரே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஏனெனில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி போட்டியிடவே இல்லை என்பது தான். போட்டியிடாத கட்சிக்குத்தான் ‘டைம்ஸ் நவ்’ 3 சதவிகித வாக்குகளை வழங்கியுள்ளது.

மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், சண்டிகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளையும்; பாஜக 38 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று கூறிவிட்டு, ஆனால் இந்த தொகுதியில் வெற்றிபெறுவது என்னவோ,பாஜக-தான் என்று முடிவு வெளியிட்டுள்ளது.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் தவறு என்றால், அது ஹரியானா மாநிலம்குறித்த கருத்துக் கணிப்புதான். ஹரியானா மாநிலத்தில் 22 தொகுதிகளில் பாஜகவெற்றிபெறும் என்று ஒரு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொடுமை என்னவென்றால், இங்கு இருப்பதே 10 தொகுதிகள்தான். 

இதேபோன்ற ஒரு கணிப்பை ‘தந்தி டிவி’யும் நடத்தியுள்ளது. அந்தக் கணிப்பில் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3 முதல் 6 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளரே போட்டியில் இல்லை.

சிரிப்பை வரழைக்கும் மற்றொரு கருத்துக் கணிப்பு தகவலும் உண்டு. அது என்னவென்றால், சேலம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் - அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம். இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகி இருக்கிறது.

click me!