இதெல்லாம் எவ்ளோ பெரிய கோமாளித்தனம்... தலையில் அடித்துக்கொள்ளும் ப.சிதம்பரம்..!

By Asianet TamilFirst Published Feb 20, 2021, 9:29 PM IST
Highlights

தென்னக மண்ணில் பாஜகவை முளைக்க விடக்கூடாது. இங்கும் வந்துவிட்டால் வடநாடு மாதிரி தென்னகமும் பாழாகிவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். “தமிழகத்தில் மாறிமாறிதான் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால், கடந்த முறைதான் அதிமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது. முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தாரா என்றே எனக்கு தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றோரைத்தான் தெரியும். சி.வி.சண்முகத்தைக் கூட கேள்விப்பட்டுள்ளேன்.


திடீரென எடப்பாடி பழனிசாமி முதல்வராகிவிட்டார். அவர் நான்கே ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். நான்கு ஆண்டுகள் நீண்ட உறக்கத்தில் இருந்த அவர், தற்போது ஊர்ஊராகச் சுற்றி வருகிறார். இது அரசுக்கு அழகில்லை. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக காவிரி-வைகை-குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த 4 ஆண்டுகளாக என்ன செய்தார்? அலாவுதீன் அற்புத விளக்கைப் போல தேய்த்தவுடன் திட்டம் வந்துவிடுமா? இந்தக் கால்வாயைக் கட்ட 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஏற்கனவே அடிக்கல்நாட்டப்பட்ட திட்டம் நிறைவுற்று அதைத் தொடங்கிவைத்தால்கூட பரவாயில்லை. இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.
கரோனா ஊரடங்கு காலத்தில் 10 லட்சம் பேர் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக வேடிக்கையான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். 10 லட்சம் பேர் மீது வழக்கு போட்டதே பெரிய முட்டாள்தனம். 10 லட்சம் பேர் மீது வழக்கு போட்டுவிட்டு, வழக்கை வாபஸ் பெற்றதை சாதனையாகக் கூறுவது மோமாளித்தனமாக இல்லையா? அதிமுக கூட்டணியாக பாஜக என்ற பொல்லாத கட்சியை அழைத்துவருகிறது. இந்தியப் பொருளாதாரத்தையே பாஜக சீரழித்துவிட்டது. சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது. விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. தென்னக மண்ணில் பாஜ கட்சியை முளைக்க விடக்கூடாது. இங்கும் வந்துவிட்டால் வடநாடு மாதிரி தென்னகமும் பாழாகிவிடும்.” என்று ப.சிதம்பரம் பேசினார்.
 

click me!