பாஜகவில் இன்று ஐக்கியமாகிறார் ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரி அண்ணாமலை... அப்போ ரஜினி முதல்வர் வேட்பாளர்..?

By Asianet TamilFirst Published Aug 25, 2020, 8:14 AM IST
Highlights

ரஜினி கட்சி தொடங்கினால், அவருடைய கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைகிறார்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனகுப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று வெளிப்படையாக அறிவித்தவர். ஐ.பி.எஸ். அதிகாரி பணியை உதறி தள்ளிவிட்டு தன் சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, கிராமப் புறங்களில் மக்களின் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இந்நிலையில் கட்சி தொடங்க உத்தேசித்த நடிகர் ரஜினி, தான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று அறிவித்தார்.


அப்போது ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை இருப்பார் என்று தகவல்கள் வெளிவரத் தொடங்கின. அண்மையில் இதுபற்றி பேட்டி அளித்த அண்ணாமலை, ரஜினியுடனான சந்திப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லவிரும்பவில்லை என்று தெரிவித்தார். அதேவேளையில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தேர்தல் அரசியலை கற்றுவருவதாக தெரிவித்திருந்த அண்ணாமலை, தற்போது பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது பாஜகவில் சேரும் முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

click me!