யாருக்கு ஈரோடு..? காங்கிரஸ் - மதிமுக இடையே தொடரும் மல்லுக்கட்டு..!

By Asianet TamilFirst Published Feb 27, 2019, 3:03 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் - மதிமுக இடையே ஈரோடு தொகுதியைப் பிடிக்கும் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் - மதிமுக இடையே ஈரோடு தொகுதியைப் பிடிக்கும் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், மதிமுகவுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. முதல் கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மதிமுகவுடன் திமுக முடித்துள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும். 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார். இளங்கோவனுக்காக ஈரோடு தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்டு வருகிறது. ஈரோடு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், அந்தத் தொகுதி அவருக்கு நிச்சயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

அதேபோல மதிமுகவின் பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்திக்காக அந்தத் தொகுதியை மதிமுகவும் கேட்டு திமுகவிடம் பட்டியல் கொடுத்துள்ளது. இதில் கணேசமூர்த்தி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்றவர். தற்போது காங்கிரஸ் - மதிமுக என இரு கட்சிகளுமே இந்தத்தொகுதியைக் கேட்டுவருகின்றன. 

இதில் ‘ஈரோடு தொகுதி தனக்குதான்’ எனக் கூறி தொகுதி முழுவதும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார் இளங்கோவன்.  அதேபோல ‘ஈரோடு தொகுதி மதிமுகவுக்குத்தான்’ என மதிமுகவினரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடே முழுமையாக முடிவடையாத நிலையில், காங்கிரஸ் - மதிமுக இடையே ஈரோடு தொகுதியைப் பிடிக்க பலத்த போட்டி நடைபெற்றுவருகிறது. ஆனால், ஈரோடு யாருக்கு என்பது மதிமுகவுடனான தொகுதி உடன்பாட்டுக்கு பிறகே தெரியவரும் என்கின்றனர் திமுகவினர்.

click me!