ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் கேளுங்கள்... மக்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஐடியா..!

By Asianet TamilFirst Published Apr 1, 2019, 10:12 AM IST
Highlights

தேர்தலுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினரிடம் 20 ஆயிரம் ரூபாய் கேளுங்கள் என்று தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

தேனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இளங்கோவனை வெளியூர்க்காரர் என்று அதிமுக தரப்பினர் பிரசாரம் செய்துவருகிறார்கள். அதிமுகவை திணறடிக்கும் வகையில் இளங்கோவனும் சலிக்காமல் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். 
தேனியில் கம்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட இளங்கோவன், ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார். “காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் வகையில்  மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டிவருகிறது. அந்த அணையைக் கட்ட யார் மணல் சப்ளை செய்கிறார்கள் தெரியுமா? துணை முதல்வர் பன்னீர் செல்வம்தான் மணல் சப்ளை செய்கிறார். லாரிகளில் கொண்டு சென்றால் தெரிந்து விடும் என்பதால் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கிறார். இது உங்களை வளர்த்த தமிழகத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா?
தேர்தலில் ஓட்டுப் போட அதிமுகவினர் பணம் கொடுக்கிறார்கள். அதிமுகவினர் கொடுக்கும் பணம் எல்லாம், மக்களிடம் கொள்ளையடித்த பணம். அவர்கள் கொடுக்கும் பணத்தை வேண்டாம் எனக் கூறாதீர்கள். ஓர் ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் எனக் கேளுங்கள். லஞ்சம் கொடுக்காமல் மக்களுக்கு ஏதாவது நடக்கிறதா? நாம் லஞ்சமாகக் கொடுத்த பணத்தைதான் தற்போது ஓட்டுக்காகக் கொடுத்துவருகிறார்கள். பணம் கொடுத்தால் வேண்டாம் எனக் கூறாமல் வாங்கிக் கொள்ளுங்கள். தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கும் அதிமுகவினரின் கனவு பலிக்காது”. 
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

click me!