இரட்டையருக்கு இரட்டை இலை... ஆளுக்கு ஒண்ணா வெச்சிக்கிங்கன்னு கடுப்பில் கொடுத்த தேர்தல் ஆணையம்!

First Published Nov 23, 2017, 6:37 PM IST
Highlights
EPS OPS Faction Wins Back AIADMKs Two Leaves Symbol


இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் முன்னர் கூறியிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்த போது, இன்று முற்பகல் திடீரென தில்லியில் அதிமுக., எம்பி., விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட அறிவிப்பாணையை தம் கண்களால் பார்த்ததாகக் கூறினார். 

இதை அடுத்து, இந்தச் செய்தி அனைத்து தமிழ் ஊடகங்களிலும் விரைவாகப் பரவியது. ஆனால், தேர்தல் ஆணையமோ கடுப்பானது. இன்னமும் தாங்கள் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் இப்படி ஊடகங்களில் செய்திகள் பரவியதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. ஆணையத்தின் தகவல் தொடர்பாளர் இதனை பகிரங்கமாகக் கூறினார்.  ஆனால், இது எதுவுமே காதில் விழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ஊடகங்களிடம் பேட்டி கொடுத்தார். தங்கள் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில், தினகரன் தரப்பினரோ, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திராத நிலையில், முதல்வருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? ஒருவேளை மத்திய அரசின் ஆசி இருப்பதால் இவர்களுக்கு தில்லியில் இருந்து போனில் செய்தி வந்ததோ என்று ஆவேசமாகக் கூறினர். இதை அடுத்து, தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து புகார் கூறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால், இரட்டை இலை குறித்த அறிவிப்பு மேலும் தாமதமாகும், அதனை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கு என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன. 

இந்நிலையில், தனது தவறை உணர்ந்தார் முதல்வர் எடப்பாடி. எப்படிப்பட்ட சூழலில் இந்தக் கேள்வி எழுந்தது என்பது குறித்து உடனே ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டது.   

அதில், செய்தியாளர்கள் இவ்வாறு ஒரு தீர்ப்பு வந்துள்ளது என்று கூறி, அது தொடர்பில் கேள்வி கேட்டதால், அதை நம்பி தான் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகக் கூறினார். தனக்கு இன்னும் அதிகாரபூர்வ நகல் கிடைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தார். 

இதை அடுத்து, இனிமேல் நிருபர்கள் எடப்பாடியிடம் கேள்வி கேட்டுவிட்டு, இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டும்

அய்யா இந்த விஷயம் நாங்க சொல்லித் தான் தெரியுமா? 

இல்லை ஏதாவது தில்லி செய்தி வந்ததா? என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு செய்தியை கொடுக்க வேண்டும் என்பதாக, நகைச்சுவை களைகட்டியது சமூக தளங்களில்!

இந்நிலையில்தான்  இரட்டை இலைச் சின்னம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் 83 பக்கம் கொண்ட அதிகாரபூர்வ அறிக்கையை அளித்தது. 

இதனால் எடப்பாடி தரப்பினர் பெரும் உற்சாகம் அடைந்தனர். இருப்பினும், இதற்கு முன்னர் இன்று நேர்ந்த குழப்பங்களால் தேர்தல் ஆணையம் கடுப்பானது என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் மதியம் 2 மணிக்கு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறியிருந்த நிலையில், ஊடகங்கள் முந்திக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா, ஆணையத்தின் அதிருப்தியை வெளியிட்டார். 
 
இப்படி இரட்டை இலை சின்னம் இபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கு கொடுக்கப் பட்டதும், அமைச்சர் பெருமக்கள் தங்களது மகிழ்ச்சியை ஓரிரு வார்த்தைகளில் ஊடகங்களில் வெளிப்படுத்தி நகர்ந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆளுக்கு ஒரு இலை கிடைத்துள்ளது என்று கருத்துகள் பரவின. மைத்ரேயன் எம்பி., இது குறித்துக் கூறிய போது, இரட்டை இலை இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது, இது எங்களுக்கு தீபாவளி என்று கூறினார்.  

இப்படியாக, உண்மையில், ஆளுக்கு ஒரு இலையாக, ஓபிஎஸ்., ஈபிஎஸ்.,  இருவருக்கும்  இரு இலையாக இணைந்து ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம், அதுவும் கடுப்பான நிலையில்! 
 

click me!