ரஜினிகாந்த்+அதிமுக+பிஜேபி இணைந்தால் திமுகவை வீழ்த்த முடியுமா..? ஏசியாநெட் நியூஸ் சர்வே சொல்வது என்ன..?

First Published Jul 30, 2018, 4:51 PM IST
Highlights
electoral survey results will rajini admk bjp alliance defeat dmk


அதிமுக-ரஜினிகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் கூட திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒண்ணும் செய்ய முடியாது!! பாஜகவை பதறவிடும் சர்வே முடிவுகள்

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. திமுக - அதிமுகவிற்கு நிகரான மாற்று இதுவரை இல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் இல்லாத இந்த சூழலில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு திரையுலக சூப்பர் ஸ்டார்களும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளனர். 

அதனால் அடுத்துவரும் மக்களவை தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் பலமுனைப்போட்டி நிலவ உள்ளது. பாஜகவிற்கு சவாலாக திகழும் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக முயல்கிறது. 

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக தெரிவித்தவுடன், ரஜினிகாந்தின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி சேருவார் எனவும் பலவிதமான தகவல்கள் பரவின. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அதிமுகவும் கூட, பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது எனவும் வர இருக்கும் மக்களவை தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடும் எனவும் பேசப்படுகிறது. 

திமுக ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுமா..? அல்லது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மற்ற கட்சிகளின் கூட்டணியில் இடம்பெறுவார்களா..? என்ற பல சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் 11691 பேரிடம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கள ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

2019ல் வர இருக்கும் மக்களவை தேர்தலை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தேர்தல் கூட்டணி குறித்தும் எந்தெந்த கூட்டணிக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது குறித்தும் 10,654 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் குறித்து பார்ப்போம். 

பாஜக-அதிமுக:

இந்த ஆய்வு முடிவின் மூலம் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக வாக்களிப்போம் என 8% பேரும், இந்த கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக என 18% பேரும் தெரிவித்துள்ளனர். 

பாஜக-அதிமுக-ரஜினிகாந்த்:

பாஜக-அதிமுக கூட்டணியில் ரஜினிகாந்தும் இணைந்தால், இந்த கூட்டணிக்கு 9% பேர் கண்டிப்பாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். 23% பேர் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். இவை இரண்டையும் கூட்டினாலே 32% ஆதரவு தான் இந்த கூட்டணிக்கு உள்ளது. 
 
திமுக-காங்கிரஸ் கூட்டணி:

ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கூட்டணிக்கு கண்டிப்பாக வாக்களிப்போம் என 19% பேரும் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக 25% பேரும் தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில், பாஜக-அதிமுக-ரஜினிகாந்த் கூட்டணி அமைந்தால்கூட, அதைவிட திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த முடியாது என்று தெரிகிறது. 
 

click me!