எடியூரப்பா அரசு தப்புமா ? கவிழுமா ? இடைத் தேர்லில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடக்கம் !! சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் !!

By Selvanayagam PFirst Published Dec 9, 2019, 8:15 AM IST
Highlights

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி  நடைபெற்ற இடைத்தேர்தலில்  பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.,இதில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசுதப்பி பிழைக்கும்.
 

கர்நாடகத்தில் மதசார் பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து . 17 எம்.எல். ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் காரணமாக மத சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் அறிவித்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர சிவாஜி நகர், கே.ஆர்.புரம், அத்தானி, கோகாக், ஹரி கேசூர், ராணிபென்னூர், விஜயநகரா, ஓசக்கோட்டை, யஷ்வந்த் புரம், மகாலட்சுமி லே-அவுட், காகவாடா, எல்லாபுரா, கே.ஆர். பட்டை, ஹுன்சூர், சிக்பள்ளாபூர் ஆகிய 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 

இதில் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், மத சார்பற்ற ஜனதா தளம்  12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.  

15 தொகுதிகளிலும் பதிவான  வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.. 10 மணிக்கு பிறகு முன்னணி நிலவரங்கள் தெரியவரும். கர்நாடகத்தில் தற்போது முதலமைச்சர்  எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடக சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் தற்போது 2 தொகுதிகள் காலியாக உள்ளன. 

பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க் களும், காங்கிரசுக்கு 66 எம்.எல்.ஏ.க்களும், மதசார் பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், நியமன எம்.எல்.ஏ. ஒருவரும் சபாநாயகரும் உள்ளனர்.

பாஜக அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதனால் 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.  8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். இல்லையென்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 9 முதல் 12 தொகுதிகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவு பாஜகவுக்கு  எதிராக வந்தால் மீண்டும் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுனா கார்கே அறிவித்திருந்தார்.

அவரது கருத்தை வரவேற்று கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலிக்கப்போவதாக மத சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான  குமாரசாமி அறிவித்துள்ளனர்..

click me!