
எட்டு வழிச் சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும், நிலத்தைக் கையகப்படுத்துவது மாநில அரசின் கடமை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
எட்டு வழிச் சாலையை அமல்படுத்த நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது அரசின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கிடையே எட்டு வழிச் சாலையைத் திட்டமிட்டபடி அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முதல்வரும், ராமதாஸும் இருந்த மேடையில் வைத்தே தெரிவித்திருந்தார். இதற்கு ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில், திமுக தலைவர் பிரச்சார கூட்டங்களில் எட்டு வழிச் சாலை பற்றிப் பேசுகிறார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் புறவழிச் சாலை வசதிகள் தேவை. சாலை அமைக்க வேண்டும், புற வழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கேட்கின்றனர், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றால் நிலத்தைக் கையகப்படுத்தித்தான் ஆக வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்தாமல் சாலை எப்படி அமைக்க முடியும். புறவழிச் சாலையும் வேண்டும், நிலத்தையும் கையகப்படுத்தக் கூடாது என்றால் அது எப்படி சாத்தியமாகும்? எனப் பேசினார்.
எட்டு வழிச் சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசின் திட்டம். நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பது எங்களின் கடமை. விவசாயிகளை அழைத்து சந்தை விலையில் நிலத்துக்குப் பணம் கொடுத்து, விவசாயிகளைச் சமாதானப்படுத்தி அதன் பிறகே நிலம் கையகப்படுத்தப்படும் என்று கட்கரி கூறினார் என்றார் முதல்வர்.