எடப்பாடி- சசிகலா- ஓ.பி.எஸுக்கு அதிர்ச்சி... மூவரையும் ஓரம்கட்ட அதிமுக முன்னாள் எம்.பி அழைப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2021, 11:31 AM IST
Highlights

ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு இதில் என்னவென்றால், அவர் தன்னை முன்னிலைப்படுத்தி அதற்கான செயல்பாடுகளில் இறங்கி செல்கிறார். அதேநேரம் சசிகலா பக்கமும் சாய்ந்து நிற்கிறார். 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், சசிகலா ஆகிய மூவருமே அதிமுகவை கைப்பற்ற முயற்சிசெய்து வருகிறார்கள். ஆனால் அந்த மூவரிடமும் சுயநலம் உள்ளது. அந்த மூவரில் சசிகலாவுக்கு ஒரு சதவிகித ஆதரவுகூட இல்லை என விமர்சித்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.

இதுகுறித்து அவர், ’’எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக உருவாகவில்லை. பன்னீர்செல்வத்தாலும் அதிமுக உருவாகவில்லை. அது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் தன்னை கட்சிக்குள் வரக்கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கிறார் சசிகலா. அவர் மட்டுமல்ல தங்களை கட்சியிலிருந்து நீக்க , உள்ளே வரக்கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே பலரும் நினைக்கின்றனர். இதனால்தான் அதிமுகவிற்கு இப்போது மோதல் வெடித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறார். சசிகலாவும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த அளவிற்கு தீவிரமாக அதிமுகவுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் சசிகலா, ஏன் தேர்தலுக்கு முன்னதாக அந்த முடிவை எடுக்கவில்லை? தேர்தலுக்கு முன்னதாக அந்த முடிவை எடுத்து அவர் அதிமுகவுக்கு வர ஏன் முயற்சி செய்யவில்லை?

அப்படி வராவிட்டாலும் கூட, அதிமுகவிற்கு ஆதரவாக நின்று அவர் செயல்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் கூட, டி.டிவி. தினகரனிடம் சொல்லி அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டிருக்க ஆணையிட்டு இருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டாலும்கூட அமமுகவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்லிவிட்டு, அதிமுகவிற்கு எதிரான போக்கில் நிற்காமல் ஒதுங்கி இருக்க டி.டி.வி.தினகரனை சசிகலா சொல்லியிருக்க வேண்டும்.

இதை எதையுமே செய்யாமல் அதிமுகவுக்கு எதிராகவே நின்று ஒவ்வொரு இடங்களிலும் கணிசமான வாக்குகளை வாங்கிக் கொண்டு தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவை நான் தான் காப்பாற்றப் போகிறேன், வழி நடத்த போகிறேன் என்று சொன்னால் எந்த அதிமுக தொண்டர் நம்புவார். அதிமுகவுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிராக செயல்படாமல் இருந்திருந்தால் சசிகலாவுக்கு இப்போது ஒரு சதவிகிதமாவது ஆதரவு இருந்திருக்கும். அவர் ஆதரவாக செயல்படாத காரணத்தினால் ஒரு சதவிகித ஆதரவு கூட இப்போது இல்லாமல் இருக்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு இதில் என்னவென்றால், அவர் தன்னை முன்னிலைப்படுத்தி அதற்கான செயல்பாடுகளில் இறங்கி செல்கிறார். அதேநேரம் சசிகலா பக்கமும் சாய்ந்து நிற்கிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேரம் பேசிக்கொண்டு காரியங்களை சாதித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அதிமுக சிக்கலான நிலையில் இருக்கிறது ’’எனக் கூறி உள்ளார்.

click me!