சத்தமில்லாமல் சாதித்த எடப்பாடி ஆட்சி... 20 ஆண்டுகளில் இல்லாத சரித்திர சாதனை..!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2020, 10:54 AM IST
Highlights

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை. 

சத்தமில்லாமல் மீண்டும் ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. 
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 459 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் நல்ல முறையில் கல்வி கற்பிக்கப்பட்டும் மாணவர்களும், பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் நிலைதான் இதுவரை இருந்து வந்தது.
 
ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளால் இப்போது நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை. அரசுப் பள்ளிகளில் இப்படி அட்மிஷன் அமோகமாக நடைபெற கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு காரணம் என்பது மேலோட்டமானது. இதையும் தாண்டி ஆழமாக அலசினால் பல்வேறு காரணங்கள் இருப்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
முதல்வர் எடப்பாடியும், அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிக் கல்வித்துறையில் தனி கவனம் செலுத்தி வருவது மறுக்க முடியாத உண்மை.

நிதி ஒதுக்கீட்டில் ஆகட்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஆகட்டும் இருவருமே பிரத்யேக அக்கறை செலுத்தி வருகின்றனர். எல்லாவற்றையும் விட மாறிவரும் இன்றைய உலகச் சூழலுக்கு ஏற்ப கணினி வழி கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் என பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாகத்தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகள் மீது திரும்பியிருக்கிறது என்பது 100 சதவீத உண்மை.

முட்டையுடன் கூடிய சத்துணவு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணிகள், சைக்கிள், லேப்டாப் என மொத்தம் 14 வகையான நலத்திட்ட உதவிகள் எவ்வித குளறுபடிகளும் இன்றி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதும் அட்மிஷன் அமோகமாக நடைபெற மற்றுமொரு முக்கியக் காரணம். ’இலவசப் பொருட்கள்தானே!’என எண்ணாமல் தரத்தில் எவ்வித குறையும் வைக்காமல், மிக நேர்த்தியான பொருட்கள் வழங்கப்படுவதை மாணவர்களும், பெற்றோர்களும் நன்றியுடன் ஒத்துக்கொள்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு சின்ன குறை கூட வைக்காதது, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி, உற்சாகமாகப் பணியாற்ற வைத்திருக்கிறது. ‘’ஏறத்தாழ 6 மாதங்கள் லாக்-டவுண். இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான நாட்கள் நாங்கள் பணிக்குச் செல்லவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த காலக்கட்டத்தில் முழு சம்பளம் வழங்கவில்லை. 30 முதல் 50 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசோ நயா பைசா கூட பிடித்தம் செய்யாமல் எங்களுக்கு முழு ஊதியம் வழங்கி வருகிறது. இதற்கு நன்றிக்கடனாக வரும் காலத்தில் இன்னும் உற்சாகமாக உழைப்போம்’’என்கிறார்கள் இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

ஆக மொத்தத்தில், எடப்பாடி அரசின் செயல்பாடுகளால் அரசு பள்ளிகளின் புகழ் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது.

click me!