பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த அதிமுக; பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்

By Velmurugan s  |  First Published Apr 20, 2023, 7:57 PM IST

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.


அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையேயான மோதல் போக்கைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. 

ஆனால் இந்த மனு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் டெல்லி நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு  தொடரப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையத்தில்  அதிமுக சட்டவிதிகள் திருத்தம் தொடர்பான மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.

Latest Videos

இந்நிலையில், அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை கொண்டாடும் விதமாக புதுச்சேரி அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது என்பது எங்கள் குடும்பத்தில் நடைபெறும் ஒரு திருவிழாவாகும், மேலும் புதுச்சேரியில் உள்ள ஒரு சிலர் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தி தவறான அறிக்கைகள் விடுகின்றனர் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

click me!