திமுகவிற்கு வாக்களித்தாலும் அவர்கள் நம் மக்கள்..! முன்னாள் அமைச்சரை கண்டித்த எடப்பாடி பழனிசாமி..!

By Selva KathirFirst Published Jun 10, 2021, 12:42 PM IST
Highlights

மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு இது தேவை தான் என்கிற ரீதியில் அந்த முன்னாள் அமைச்சர் பேசியுள்ளார். இதனை கேட்டு எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆனதாக கூறுகிறார்கள்.

திமுகவிற்கு வாக்களித்து ஆட்சிக்கு வரவழைத்த காரணத்தினால் தான் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லாமல் தினம் தினம் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், திமுகவிற்கு வாக்களித்த மக்கள் சாகட்டும் என்கிற ரீதியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவரை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பெரும்பாலும் சேலத்திலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகாமிட்டிருந்தார். அங்கிருந்தபடியே எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனையும் மேற்கொண்டு வந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஒரு முறை எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தார். பிறகு அண்மையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். இந்த சமயம் சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் தான் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி சென்னை வந்திருப்பதை அறிந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் அவரை சந்திக்க பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது பங்களாவுக்கு சென்று இருந்தனர். சிலர் தனியாகவும் சிலர் நிர்வாகிகள் பலருடன் சென்று எடப்பாடியை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதன் பிறகு பின்னிரவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கொரோனா சூழலில் திமுக அரசுக்கு எதிராக எப்படி செயல்படுவது என்பது தான் அந்த ஆலோசனையின் முக்கிய அம்சம். இந்த கூட்டத்தில் கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு வலது கரமாக செயல்பட்ட அமைச்சர்கள் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

அப்போது முன்னாள் அமைச்சரும் தேர்தலில் வென்று எம்எல்ஏவாக இருக்க கூடிய ஒருவர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா அதிகரித்தது குறித்து பேசியுள்ளார். மேலும் திமுக அரசிடம் நிர்வாகத் திறமை இல்லை. அதனால் தான் அவர்களால் கொரோனா கட்டுப்படுத்த இயலவில்லை. மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு இது தேவை தான் என்கிற ரீதியில் அந்த முன்னாள் அமைச்சர் பேசியுள்ளார். இதனை கேட்டு எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆனதாக கூறுகிறார்கள். திமுக அரசின் தவறுகளுக்கு மக்களை குறை கூறக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அந்த முன்னாள் அமைச்சரை கண்டித்துள்ளார்.

மேலும் திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி நமது ஆட்சியாக இருந்தாலும் சரி மக்கள் தான் முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்து வாக்களித்த காரணத்தினால் நாம் மக்களை கைவிட்டு விடக்கூடாது. இந்த கொரோனா காலத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாமும் உதவ வேண்டும். மேலும் அரசுக்கும் இந்த விஷயத்தில் நாம் திறந்த மனதுடன் ஆலோசனைகளை வழங்க வேண்டும். கொரோனாவில் அரசியல் செய்யக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறுகிறார்கள்.

மேலும் கொரோனா சூழலில் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை எம்எல்ஏக்களாக இருப்பவர்களும் சரி இல்லாதவர்களும் சரி தவறாமல் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். இதனை அடுத்தே மாவட்டங்கள் தோறும் அம்மா உணவகத்திற்கான செலவை தற்போது முன்னாள் அமைச்சர்கள் ஏற்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் சொந்த பணத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

click me!