பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கார் மீது கல்வீச்சு!

First Published Jul 21, 2018, 8:28 AM IST
Highlights
Edappadi palanisamy car attack by salem people


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிகளை கடந்த நிலையில், அங்கிருந்து டெல்டா பாசனத்திற்காக, நீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டப் பணிகள் காரணமாக, எடப்பாடி பழனிசாமி மீது சேலம், தருமபுரி மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. சொந்த மாவட்ட மக்களிடம் அதிருப்தியை சம்பாதிப்பது நல்லதல்ல என பழனிசாமி நினைக்கிறார்.

மக்களின் அதிருப்தியை மாற்றி, ஆதரவை அதிகரிக்கும் விதமாக, நேரில் சென்று மேட்டூர் அணை நீரை திறந்துவிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டார். ஒரு முதல்வரே நேரில் வந்து அணையில் நீர் திறந்துவிடுவது இதுவே முதல் முறையாகும். 

இதற்காக, புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலத்திற்குச் சென்றார். சாலை மார்க்கமாக சேலம் அருகே சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென முதல்வரின் கார் மீது கல் வீசி, மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். 

இதில், முதல்வரின் கார் லேசாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அவரது காரை மாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வேறு ஒரு காரில் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், அடுத்த நாள் முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்பினார்.  

எனினும், அவரது கார் மீது கல் வீசப்பட்டது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. போலீசாரும், முதல்வர் பிரிவு அதிகாரிகளும் இதில் மவுனம் காக்கின்றனர். இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளி பிடிபட்ட பிறகே, உண்மை விவரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையே, சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி கார் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

click me!