68 வருஷமா ஒரு தொழிலை பார்ப்பீங்க... திடீர்ன்னு அங்கிருந்து வந்து ஆட்சியைப் பிடிச்சிடுவீங்களோ... ரஜினியை மறைமுகமாகப் போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி!

By Asianet TamilFirst Published Nov 9, 2019, 8:19 AM IST
Highlights

ஏதோ திடீரென அரசியலில் பிரவேசித்து பதவிக்கெல்லாம் வந்துவிட முடியாது. அப்படி வருபவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் அல்ல தமிழ்நாட்டு மக்கள். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அதிமுகதான்.
 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரடியாகவும் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகவும் விக்கிரவாண்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்தது. அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த அதிமுகவுக்கு வாக்களார்கள் சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.  “ நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி கூறி வெற்றி பெற்றார். அதை மக்கள் இப்போது உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வாவை கொடுத்துவிட்டார்கள். பலரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப் போவதாகப் பேசிவருகிறார்கள்.


 இது அரசியல். சினிமா அல்ல. 68 ஆண்டுகள் வேறு தொழிலில் இருந்துவிட்டு அரசியலையும் தொழில் போல் நினைத்து வரலாம் என நினைக்கிறார்கள்.  ஏதோ திடீரென அரசியலில் பிரவேசித்து பதவிக்கெல்லாம் வந்துவிட முடியாது. அப்படி வருபவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் அல்ல தமிழ்நாட்டு மக்கள். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அதிமுகதான்.
.அதிமுக கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறும். அதிமுகவில் வெற்றிடம் நிலவுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்ற நிலையை மக்களே உருவாக்கி நற்சான்றிதழை வழங்கியுள்ளனர். மு.க. ஸ்டாலினுக்கு திமுக தலைவர் பதவியை அவரது தந்தை கருணாநிதியே கொடுக்க முன்வரவில்லை. தந்தையே முன்வராதபோது தமிழக மக்கள் எப்படி ஆட்சியை ஸ்டாலினிடம் கொடுப்பார்கள்? தந்தையே நம்பாத மகனை தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்?” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 நடிகர் ரஜினி கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி வழங்கப்போவதாகக் கூறிவருகிறார். தமிழகத்தில் வெற்றிடம் நிலவிவருவதாகவும் பேசிவருகிறார். இந்நிலையில் ரஜினியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

click me!