
குற்றவாளிகளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தது குற்றமா என்று எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த வார்டு பகுதிக்கு விரைந்தார்.
அப்போது, சிலர் அந்த வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது தலைமையில் சென்ற வழக்கறிஞர் அணியினரும் துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒரு நபரை மட்டும் அதிமுகவினர் பிடித்தனர். அந்த நபரை சூழ்ந்த அதிமுகவினர் சிலர் அவரை தாக்கினர். அப்போது, அங்கே இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அந்த நபரை அரை நிர்வானமாக இழுத்துச் சென்றனர். இதை அடுத்து வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயார். மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தாலும், அவர்களை தோல்வி அடைந்தவர்கள் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து அலுவலர்களும் வாய்மொழி உத்தரவை திமுக பிறப்பித்திருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் ஜனநாயக முறைப்படி நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு வார்டுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முடிவை அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவில் தவறு நேர்ந்தால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். தேர்தல் நேரத்தில் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டது திமுக. குற்றவாளிகளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தது குற்றமா? திமுக வெற்றி பெற்றால் அது உண்மையான வெற்றி ஆக இருக்காது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.