ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் ஆட்டம் போடும் அமைச்சர்கள்... கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் எடப்பாடி!

First Published May 12, 2017, 3:51 PM IST
Highlights
Edapadi Palanisamy is difficult to control his Minister


முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அமைச்சர்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமுகவில் யாருக்கும் இல்லாமல் போனதால், அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அவர் எதிரில் நின்று பேசுவதற்கு கூட பயந்தவர்கள், இன்று போடும் ஆட்டம், அதிமுகவினரே முகம் சுளிக்கும்  அளவுக்கு ஆளாகி இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சரே, வருமான வரி சோதனைக்கு உள்ளான பின்னரும், அவர் இன்னும் அமைச்சராக தொடர்வது, தமிழக அரசுக்கே தலை குனிவு என்றுதான் சொல்லவேண்டும்.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்ற போது அத்துமீறி நுழைந்து, அங்குள்ள அதிகாரிகளை மிரட்டியதாக, காவல் துறையில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, காமராஜ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர்கள் அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதி மன்றம், கடுமையாக கண்டித்த பின்னர், உணவு துறை அமைச்சர் காமராஜ் மீது, 30 லட்ச ரூபாய் பணமோசடி வழக்கு, மன்னார்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அமைச்சர் பதவியில் இருந்து இன்னும் அவர் நீக்கப்படவில்லை.

இந்நிலையில், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜ மீனாட்சியை, பணி நிரந்தரம் செய்ய 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது,  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். 

இத்தனைக்கும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நேரடியாக பணியில் நியமிக்கப்பட்டவர் ராஜ மீனாட்சி. அவருக்கே இந்த மிரட்டல் என்றால், மற்றவர்களின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை.

அமைச்சராக பதவி ஏற்பவர்கள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணம், மற்றும் ரகசிய காப்பு பிரமானத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதற்கு, மேற்கண்ட சம்பவங்களே சான்றாக இருக்கும்போது, அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழாமல் இல்லை.

அதன்படி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு, சரோஜா ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காதவரை, ஆளும் அரசு மீது ஏற்பட்டுள்ள களங்கம் நீங்காது. மேலும், அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் இழக்க நேரும்.

எடப்பாடி தலைமையிலான அரசில் இருக்கும், மேற்கண்டவர்களை  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அவர்களுடன் சில எம்.எல்.ஏ க்களும், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வார்கள் என்ற அச்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

வார்த்தைக்கு வார்த்தை இது  ஜெயலலிதாவின் அரசு என்று கூறும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவின் பாணியில் அதிரடி நீக்கம் மற்றும் நியமனங்களை மட்டும்  பின்பற்ற தயங்குவது ஏன்? என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   

click me!