
சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தாலும், ஒதுங்கி கொள்வதாக தினகரன் அறிவித்தாலும், அது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஒரு பக்கம், இரு அணிகளையும் இணைப்பது குறித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என்று குழு அமைத்தாலும், மறுபக்கம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை கட்சியின் பொது செயலாளர் ஆக்கும் முயற்சியில் எடப்பாடி ஈடுபட்டுள்ளார் என்று ஒரு தகவல் உலவுகிறது.
மேலும், அமைச்சர்கள் சுயமாக என்னை நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்தால், சந்தோசப்பட்டு இருப்பேன், ஆனால், தஞ்சாவூரில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப, தலையாட்டி பொம்மைகளாக செயல் படுகின்றனர் என்று தினகரன் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி இருக்கிறார்.
இந்த இரண்டு தகவலுமே, பன்னீர் அணியினரின் காதுகளுக்கு வந்துள்ளது. இதனால், சசிகலா குடும்ப உறவினர்கள் நீக்கத்தை வெளிப்படையான அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த சி.பி.ஐ விசாரணையிலும் பன்னீர் தரப்பு உறுதியாகவே உள்ளது.
எடப்பாடி அணியினர் என்னதான் சொன்னாலும், சசிகலா குடும்பத்தினர் எப்படியும், ஏதோ ஒரு வழியை கண்டு பிடித்து, கட்சிக்குள் நுழைந்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே, பன்னீர் தரப்பினர், தாங்கள் விதித்த நிபந்தனைகளில் உறுதியாக உள்ளனர்.
ஆனால், அதிமுகவை பொறுத்தவரை, எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இல்லை என்றாலும், தொண்டர்களின் ஆதரவு பன்னீருக்கே முழுமையாக இருக்கிறது.
மேலும் பன்னீர் தரப்பு ஒத்து வந்தால் மட்டுமே கட்சியின் பெயரையும், இரட்டை இல்லை சின்னத்தையும் சிக்கல் இல்லாமல் மீட்க முடியும்.
அத்துடன், பன்னீரை முன்னிறுத்தினால் மட்டுமே தேர்தலில் வாக்குகளையும் பெற முடியும் என்பது எடப்பாடி தரப்பினருக்கு நன்றாகவே தெரியும்.
அதனால், கொம்பும் நோகாமல், பாம்புக்கும் காயம் இல்லாமல் அடிப்பது போல, பன்னீருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமலே, அவரது அணியை இணைத்துவிட வேண்டும் என்று எடப்பாடி அணியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், இதை நன்கு அறிந்த பன்னீர்செல்வம், நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதன் காரணமாகவே அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.