துரைமுருகன் பொருளாளராக நீடிப்பார்... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 3, 2020, 1:48 PM IST
Highlights

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். 
 

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். 

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவையடுத்து, புதிய பொதுச் செயலாளர் தேர்வுக்காக மார்ச் 29ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சீனியாரிட்டிபடி பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தார். இதை ஏற்றுக்கொண்டதாக ஸ்டாலினும் அறிவித்தார். இதையடுத்து துரைமுருகன் பொதுச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. அதேநேரம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் அனைத்துக் கட்சிகளின் நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டதுபோல திமுக பொதுக்குழுவும் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், அலுவலக ரீதியாக துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அதேநேரம் இன்னும் பொதுச் செயலாளராகவும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கிடையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து திமுகவின் சட்டத்தில் ஒரு திருத்தம் தலைவரின் பிரத்யேக அதிகாரத்தால் கொண்டு வரப்பட்டது

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில்;- கொடிய நோயான கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், கழக சட்ட விதி:17-யை பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் - பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், கழக சட்ட விதி:18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, திரு.துரைமுருகன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!