மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆயுதத்துக்கு ஆப்பு வைத்த துரை முருகன்... உ.பி.,கள் மீது அதிருப்தி..!

By Thiraviaraj RMFirst Published Sep 10, 2019, 11:30 AM IST
Highlights

அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் மொழி ஆயுதத்தை வேறு மொழியும் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறி மழுங்கடித்த துரை முருகனின் பேச்சை தலைமை ரசிக்கவில்லை எனக் கூறுகிறார்கள். 

திமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்கப்படாதது வேதனையைத் தருவதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

பேராசிரியர் பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்கிற நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, சமயம் சார்ந்து இருந்த தமிழை சமுத்துவம் சார்ந்த தமிழாக மாற்றியது திராவிடம் என்றார். திருக்குறளில் எல்லா சமூகத்தில் உள்ள ஒழுங்குமுறை கூறப்பட்டுள்ளதால்தான் திராவிட இயக்கம் திருக்குறளை உயர்த்தி பிடித்துள்ளதாகக் ஆ.ராசா தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ’’வெள்ளைக்காரர்கள் வரவில்லை என்றால், இந்தியா சோமாலியா போல் ஆகியிருக்கும். பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், தாய் மொழி மீது அதிக பற்று வேண்டும். தி.மு.க.,காரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஓட்டல்களில் வட இந்தியர்கள் தான் அதிகமாக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிகிறது. அதனால், எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம்’’ என்று கூறினார்.

ஹிந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி அரசியல் நடத்தி வருகிறது திமுக. இந்நிலையில் வடநாட்டவர்களிடம் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம் என்றும் பிற மொழியை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்றும் திமுக பொருளாளர் துரை முருகன் கூறியிருப்பதை அக்கட்சியினரே ஆச்சர்யமாக பார்க்கின்றனர். அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் மொழி ஆயுதத்தை வேறு மொழியும் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறி மழுங்கடித்த துரை முருகனின் பேச்சை தலைமை ரசிக்கவில்லை எனக் கூறுகிறார்கள். 

click me!