
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் விவகாரம் நாளை மறுநாள் (நவ.8) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆறாம் ஆம் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ட், அணியினருக்கும், டிடிவி
தினகரன் அணியிருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்று 6 ஆம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 1 ஆம் தேதி நடந்த 5 ஆம் கட்ட விசாரணையின்போது இரு அணியினரின் வழக்கறிஞர்களும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கடுமையாக வாதிட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புகளை வாசித்த டிடிவி தினகரன் தரப்பினர் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க முடியாது என்று வாதிட்டனர். மேலும், தங்கள் தரப்பு
வாதங்க்ளை முன்வைக்க அவகாசம் கேட்டனர். ஆனால், டிடிவி தினகரன் அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக எடப்பாடி அணியினர் குற்றம் சாட்டினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது. இதன் பிறகு அடுத்த கட்ட விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்றும் முடிவடையாத நிலையில் நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர் இரட்டை இலை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை மேலும் 2 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.