
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அல்லாத தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் நீண்ட நாள் இழுபறிக்குப் பிறகு, அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தது. இந்த இணைப்பால், அதிமுக தொண்டர்கள் உற்காசமடைந்ததாக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர்.
இந்த இணைப்பின் மூலம், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்றும், அவருக்கு இதுவரை வழங்கப்பட்ட ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், ஆளுநரிடம் டிடிவி அணியினர் கடிதம் கொடுத்துள்ளனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன், 4 ஆண்டுகளை இந்த ஆட்சி பூர்த்தி செய்யுமா என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது என்று நேற்று கூறியிருந்தார். மேலும், சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று அவர் கருத்து
தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று கும்பகோணத்தில், திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அல்லாத தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் நியமனங்கள் செல்லாது என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு வெற்றி கிடைக்காது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.