‘திமுக நிர்வாகிகளுக்கு மானம், ஈனம், சுயமரியாதை போன்றவை இருக்கக் கூடாது’ என்று அக்கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது:நீங்கள் மேயராக விரும்பினால், வீடு வீடாக ஏறி இறங்க வேண்டும். கட்சி யினரிடம் விரோதத்தை வளர்க்காதீர்கள். துரோகத்தை மறந்து விடுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுங்கள்.தேர்தல் அறிக்கையில், 505 உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.
90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், 'கொரோனா காலத்தில் பலர் வேலை இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பலர் பட்டினி கிடக்கின்றனர். அதனால், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் கொடுக்கவில்லை. அப்போது ஸ்டாலின், 'நான் முதல்வரானால், நிச்சயமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,000 ரூபாய் கொடுக்கப்படும்' என்றார், சொன்னபடி அவர் வழங்கினார்.
undefined
தேர்தலில் 'சீட்' வழங்காததால் என்னை திட்டுகின்றனர் என மாவட்டச் செயலர் கூறுகிறார். திட்டத்தான் செய்வார்கள். எப்போதும் மாலை போடுவார்களா? கல்லால் அடிக்காத வரை சந்தோஷப்படுங்கள்.இதுபோல் மாவட்டச் செயலராக இருந்தபோது, நான் எவ்வளவு அடிபட்டிருப்பேன். மானம், ஈனம், சுயமரியாதை எல்லாம் இல்லாமல் இருந்தால் தான், கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும்.ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
திமுகவில் இருக்கும் வரை தான் நமக்கு மரியாதை. டி.ஆர்.பாலு பெரிய ஆளாக இருக்கலாம். அகில இந்தியாவில் கொடி கட்டி பறக்கலாம். பார்லிமென்டில் மோடியின் பிடரியை பிடித்து இழுக்கலாம். ஆனால், டி.ஆர்.பாலு, திமுக எனும் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போது தான் அந்த மீனுக்கு சக்தி. வெளியே துாக்கி போட்டால், கருவாடாக ஆகிடும். நிர்வாகிகள் சரியாக நடந்து கொண்டால் சரியாக போற்றப்படுவீர்கள். சரியாக நடக்காத நிர்வாகிகளை துச்சமென நினைத்து, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுவோம்’ என்று பேசினார்.