திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..! அதிரடி காட்டும் ஸ்டாலின்..!

Published : Apr 13, 2020, 09:30 AM ISTUpdated : Apr 13, 2020, 09:36 AM IST
திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..! அதிரடி காட்டும் ஸ்டாலின்..!

சுருக்கம்

கொரோனா நோய் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்

இந்தியாவில் வேகம் எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ஐ எட்டியிருக்கிறது. இதுவரை 11 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் கொரோனா மருத்துவத்துறை சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அவசியம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்காமல் இருப்பது குறித்து விமர்சித்து ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுத, அதற்கு திமுக தலைவர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்தார். இதனிடையே ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்க கூடாது என்றும் அரசு மூலமாகவே கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளது.

இது குறித்து தி மு க தலைமை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கொரோனா நோய் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த நடவடிக்கையை அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. கொரோனா பரபரப்பிலும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் மாறிமாறி விமர்சனம் செய்து வருவது பொதுமக்களை கவலையடைச் செய்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!