உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியா..? மாஃபா பாண்டியராஜனை விளாசி தள்ளிய திமுக!

By Asianet TamilFirst Published Dec 3, 2019, 8:50 PM IST
Highlights

ஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த துரோகச் செயல். அனுதினமும் - அணுப்பொழுதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தங்கள் ஒரே கடமையாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அதன் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரும், ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன?
 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இந்தி பிரசார சபா மூலம் இந்தி மொழி பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். 
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:


“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ் ‘வளர்ச்சித்துறை’ தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே தற்போது மாறிவிட்டிருக்கும் அவலம் நேர்ந்து கொண்டிருக்கிறது. “மெல்லத் தமிழ் இனிச் சாகுமோ” என தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், ஆர்வலர்களும் நெஞ்சம் பதறும் வண்ணம் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடக்கி வைத்து, அதற்காக 6 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.


அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழில் உயர்கல்வி பயிலும் இம்மாணவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலைவாய்ப்பு உருவாகும் என்ற பழைய புளித்துப் போன கதையை மீண்டும் திருவாய் மலர்ந்தருளி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். ‘தமிழ் அழிப்பு மற்றும் பண்பாட்டு சிதைவு’ அமைச்சராக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிற பாண்டியராஜன்! இந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கிவரும் ‘இந்தி பிரச்சார சபா’ மூலமாக நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப்பெறும் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழ் வளர்ச்சித் துறையையும் கேலிக்குரியதாக ஆக்குவதோடு மட்டுமல்லாது கடும் கண்டனத்திற்குரியது.
தனிநாயகம் அடிகளாரின் பெருங்கனவில் உருவாகி, அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டு, கருணாநிதியால் செம்மைப்படுத்தப்பட்ட தமிழுக்கே உரிய ஓர் அமைப்புதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ்க்கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு அறிவியல் எனத் துறை தோறும் தமிழாய்வினை மேம்படுத்துதல், உலகத் தமிழறிஞர்களிடையே தொடர்புகொண்டு நிறுவனமும், தமிழறிஞர்களும் பயன்கொள்ளும் நிலையில் தமிழ் ஆராய்ச்சியினை வளர்த்தல் போன்றவற்றை தலையாய நோக்கமாகக் கொண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இன்னொரு முக்கிய நோக்கம் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் என்பதே.
ஆனால், இந்த முக்கிய நோக்கங்களை அடியோடு சிதைத்துவிட்டு தமிழாராய்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தி பிரச்சார சபாவோடு இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தி கற்றுக் கொடுக்க முயல்வது ஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த துரோகச் செயல். அனுதினமும் - அணுப்பொழுதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தங்கள் ஒரே கடமையாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அதன் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரும், ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன?
மொழிப் பிரச்னையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து, தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் தொடங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

click me!