
திமுக திராவிட கட்சிகளில் பெரிதாக அறியப்பட்டாலும் அதன் அச்சாணியும் அனைத்து சுற்றல்களும் கருணாநிதியை நோக்கியே கடந்த 40 ஆண்டுகாலமாக மாறிப்போனது. பின்னர் அது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தலைமை தாங்கும் ஒன்றாக மாறிப்போனது. தற்போது குடும்ப உறுப்பினர்களின் முட்டல் மோதலை ஒட்டியே சகலமும் தீர்மானிக்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து கட்சியின் அதிகாரம் மெல்ல மெல்ல மு.க.ஸ்டாலினை நோக்கி நகார்ந்துவிட்டது என்றே சொல்லலாம். ஊருக்கே தலைவராக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதி பாசத்தால் கட்டப்பட்டு யாருக்காவது கட்டுப்பட்டே இருந்தார்.
முரசொலி மாறன் மறைவு வரையிலும் கட்சி அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. மு.க.ஸ்டாலின் அடங்கி கிடந்தார். கனிமொழி தலையெடுக்கவே இல்லை. அழகிரி மதுரைக்குள்ளேயே கிடந்தார். அவருக்கு பின்னர் கட்சிக்குள் மூன்று அதிகார மையங்கள் முக்கியமாக தலையெடுத்தது. அதில் அழகிரியை அழகாக மு.க.ஸ்டாலின் நகர்த்திவிட்டார்.
கனிமொழி அப்பாவின் தயவால் ஓரளவு காலம் தள்ள முடிகிறது. அழகிரி போல் வேகமெடுத்தால் காணமல் போய்விடுவோம் என்பதால் நிதானமாக அடியெடுத்து வைக்கிறார் கனிமொழி. ஆனாலும் அவர் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. சில மாவட்டங்களில் தனக்கு ஆதரவாளர்களை வைத்து பார்த்தார். ஆனால் காலத்தின் கோலம் கனிமொழி பின்னால் இருந்தால் காலம்தள்ள முடியாது என்று தளபதியின் தலைமையேற்றுவிட்டனர் அவர்கள்.
தற்போது இருப்பது மகளிர் அணி நிர்வாகி ராஜ்யசபா எம்பி பதவி அப்பாவின் அன்பு , காங்கிரசில் உள்ள தொடர்புகள். மு.க.ஸ்டாலினுக்கு செல்லி அரசியலில் ஆட்கள் இல்லாததால் கனிமொழிக்கு அந்தப்பக்கம் சற்று சுதந்திரம் தர்ப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு காங்கிரசை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அதிக இடங்களில் தன்னுடைய ஆட்களை நிறுத்தி திமுகவுக்கு பூஜ்யத்தை வாங்கி கொடுத்தது மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம். இதனால் உஷாரான திமுக தலைவர் தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை என்றதும் கனிமொழியின் யோசனை கேட்டு அவர் மூலம் உடனடியாக குலாம் நபி ஆசாத்தை வரவழைத்து வேலையை முடித்தார்.
அப்போதும் காங்கிரசுக்கு 23 இடங்களுக்கு மேல் தர முடியாது என ஸ்டாலின் அடம் பிடிக்க 28 க்கு ஒத்துகொண்டு ஈவிகேஎஸ் செல்ல டெல்லியில் ராகுலிடம் வாங்கிகட்டிக்கொண்டு சென்னை வந்தார். அதன் பின்னர் பேசி முடித்து 41 இடம் நின்றனர். திமுகவினரே ஒத்துழைக்காத நிலையில் , காங்கிரஸ் உறுப்பினர் தேர்வில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கல்லா கட்டியதால் காங்கிரஸ் பல இடங்களில் மண்ணை கவ்வியது.
தனது மகனின் வெற்றியை திமுகவினரே கெடுத்தார்கள் என்று திருநாவுக்கரசர் புலம்பும் அளவுக்கு உள்குத்து இருந்தது. இதிலும் கனிமொழிக்கு பின்னடைவு. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் ஸ்டாலின் கை ஓங்க உடல்நிலை ஒத்துழைக்காததால் பெரியவர் அதை பொறுத்துகொண்டார். தற்போது அதிகாரம் 89 எம்.எல்.ஏக்கள் , மாவட்டசெயலாளர்களில் 75 சதவிகிதத்திற்கு மேல் தன் கையில் இருப்பதால் தளபதி தலைவர் இடத்தை நெருங்கி வருகிறார்.
ஆனாலும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வலுவாக இருக்கும் கருணாநிதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கனிமொழி சுத்தமாக ஓரங்கட்டப்ப்ட்டு விட்டார். அவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கட்சியில் இல்லாததால் சற்று ஒதுங்கியே இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்றவுடன் உற்சாகமான கனிமொழி தனது மகளிர் அணிக்கு அந்த 50% கோட்டாவை அளிக்க வேண்டும் என்று காய் நகர்த்தினார்.
ஆனால் 5 % கூட தர முடியாது என்று மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்துப்போன கனிமொழி கட்சியிலிருந்து சுத்தமாக ஒதுங்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் முதலாளித்துவ கட்சிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு எல்லாம் வட்டம், மாவட்டம் குடும்ப பெண்களுக்கு என்பது தெரிந்தும் மோதிப்பார்த்து சோர்ந்துப்போய் ஒதுங்கி இருக்கிறார்.
தற்போது அனைத்து விவசாய சங்க கூட்டமாக சுறுங்கிப்போன அனைத்து கட்சி கூட்ட தீர்மான நகலை எடுத்துகொண்டு ஜனாதிபதியை பார்க்கவேண்டிய பணி மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள தலையாய பணி . கட்சியில் அதிகார போட்டியில் கனிமொழியின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டு தளபதி ராஜநடையுடன் தன் பயணத்தை தொடருகிறார். - முத்தலீஃப்