தமிழகத்தை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் புறக்கணிப்பு- தமிழக அரசு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்களம் சூடு பிடித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை தினம் தோறும் விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும் தமிழகம்,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகிறது.
குறிப்பாக தமிழக வெள்ள பாதிப்பின் போது நிதி உதவி வழங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு நிதி உதவி வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் ஆகியோர் தமிழகத்தின் நேரடியாக வெள்ள பாதிப்பை பார்வையிட்டு சென்ற பின்னரும் இதுவரை ஒரு ரூபாய் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது .
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
இந்த பிரச்சனையை நாடாளுமன்ற கூட்டத்திலும் திமுக சார்பாக பிரச்சனை எழுப்பப்பட்டது. இதே போல மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டமோ, புதிய அறிவிப்போ இடம்பெறவில்லையென்றும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
சமூகவலைதளத்தில் டிரெண்ட்
இதனிடையே மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து உரிய நிதி பகிர்வை வழங்கவில்லையென குற்றச்சாட்டு கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களுக்கு வழங்கவில்லையென கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் BJPLootingOurTax என்ற வாக்கியத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
10 வருட தோல்வியை மறைக்கும் மோடி... காங். கருப்பு அறிக்கையில் பொய்களை போட்டு உடைந்த கார்கே!