உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சாக்குபோக்கு... அதிமுக அரசை நாடாளுமன்றத்தில் வெளுத்துவாங்கிய ஆ.ராசா!

By Asianet TamilFirst Published Jul 16, 2019, 10:06 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதன் மூலம் லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் அதிமுக ஆட்சியாளர்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது அதிமுக அமைச்சர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது.

உண்மையாகவே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பினால், உள்ளாட்சி தேர்தல் கட்டாயம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றிய விவாதம் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி ஆ.ராசா, தமிழகத்தில் அதிமுக ஆட்சி உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதைப் பற்றி கடுமையாகத் தாக்கி பேசினார்.


 “ பஞ்சாயத்து அமைப்புகள் ஒரு குட்டி குடியரசு என்று அரசியலமைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மக்களுக்கான பணிகளை வெளிப்படையாக உறுதி செய்யும் பொருட்டு நம் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், தற்போது வெளிப்படைத்தன்மையை மூடி மறைக்க சில மாநிலங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது.


உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதன் மூலம் லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் அதிமுக ஆட்சியாளர்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது அதிமுக அமைச்சர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது. அவர்களின் டெண்டர் ஊழல்களை பட்டியலிட்டு திமுக தலைவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை சாக்குப்போக்குச் சொல்லி தாமதப்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம்.
பொதுவாக தேர்தல் ஆணையம் என்றால் அது தன்னாட்சி அமைப்பாக சுயமாக இயங்க வேண்டும். ஆனால், தமிழக தேர்தல் ஆணையமோ மாநில அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தலை நடத்த மேலும் மேலும் கால அவகாசத்தை நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு வழங்கும் 60 கோடி ரூபாய் உள்ளாட்சி நிதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பினால், உள்ளாட்சி தேர்தல் கட்டாயம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று ஆ.ராசா பேசினார். 

click me!