அறிவாலயத்தை அலறவைத்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம்.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 5, 2020, 1:10 PM IST
Highlights

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், தமிழ்க் கடவுள் முருகனை விமர்சித்தவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுக உட்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும்.

இந்தியாவில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு எல்லா விதத்திலும் இடையூறாக இருக்கும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்ந்த அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கிறேன். திமுக தலைமைக்கு தகவல் கூறாமல் வந்ததாக செல்வம் தெரிவித்தபோது இதற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழக்கத்திலிருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!