விரைவில் கைதாகிறார் திமுக எம்எல்ஏ..? செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 12, 2020, 1:00 PM IST
Highlights

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.

அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஜஜி நாகராஜன், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார். கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டிமோதல் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!