ஜனவரி 4ம் தேதி திமுக பொதுக்குழு

First Published Dec 26, 2016, 12:09 PM IST
Highlights


கருணாநிதி உடல்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட திமுக பொதுக்குழு ஜனவரி 4ல் நடக்க உள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டு தோறும் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முதல்நாள் ஜூன் 2ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில் திமுகவில் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் வரவுள்ளன. திமுக தலைவராக இருக்கும் கருணாநிதி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயோதிகம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

திமுகவின் தலைவர் பதவியை கைப்பற்ற பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். திமுகவில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் இடையே நடைபெறும் அதிகார போட்டியில் ஸ்டாலின் கிட்டதட்ட திமுகவை வசப்படுத்தி விட்டார்.

அழகிரி, திமுகவுக்குள் வருவதே பெரும்பாடாக உள்ளது. கனிமொழி, கட்சியில் முக்கிய பதவி பெறுவதற்கு ஸ்டாலின் தயவை எதிர் பார்க்கும் நிலை உள்ளது. மறுபுறம் ஸ்டாலின், திமுகவின் மாவட்ட செயலாளர்களில் ஆதரவை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட தலைமை பதவியை ஸ்டாலின் நெருங்கிவிட்டார்.

இதன் அறிகுறியாக கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக 89 எம்எல்ஏக்களை பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. பொதுவாக திமுக சட்டமன்ற தலைவராக கடந்த 48 ஆண்டுகளாக கருணாநிதியை இருந்து வருகிறார். ஆனால், இந்த முறை மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைமைக்கு வரவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது. மு.க.ஸ்டாலினும், அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறார். இதற்கு, திமுக தலைவர் கருணாநிதி, ஓரளவு ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

அதனால், பொதுக்குழுவில் ஸ்டாலின், செயல் தலைவர் அல்லது துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மற்ற முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!