
பான், குட்கா விவகாரம் இன்றும் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. ஏற்கனவே, நேற்று இந்த விவகாரம் குறித்து, பேச வேண்டும் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் அனுமதி கேட்டார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து விட்டார். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து திமுகவினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை துவங்கிய நிலையில், பான், குட்கா விவகாரம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டனர்.
ஏற்கனவே ஆதாரங்கள் கொடுத்த அடிப்படையில், மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர், பான், குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.
அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இது பற்றி, முதலமைச்சர் விரிவாக பதிலளிக்க உள்ளதாகவும், தாங்கள் அமருங்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து பதிலளித்தார். பான் குட்கா விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ஆஜராகி முறைப்படி விசாரணை நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று குறிப்பிட்டு அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளதால், இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும. பான், குட்கா லஞ்சப் புகார், ஊழல் கண்காணிப்பு, மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார். முதலமைச்சர் பதில் மழுப்பலாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.