கனிமொழியின் கண் எதிரே தி.மு.க. வி.ஐ.பி.க்களின் தெருச்சண்டை...!

By Vishnu PriyaFirst Published Mar 29, 2019, 5:09 PM IST
Highlights

சென்னை சி.ஐ.டி.காலனியை மறந்து தூத்துக்குடியே கதி என்று சில மாதங்களாய் தவம் கிடக்கிறார் கருணாநிதியின் மகள் கனிமொழி. அதற்கு காரணம்?...இந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அவர்தான். 

சென்னை சி.ஐ.டி.காலனியை மறந்து தூத்துக்குடியே கதி என்று சில மாதங்களாய் தவம் கிடக்கிறார் கருணாநிதியின் மகள் கனிமொழி. அதற்கு காரணம்?...இந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அவர்தான். 

தன்னை எதிர்த்து பி.ஜே.பி.யின் மாநில தலைவரே நிற்பதால் ஏக முனைப்புடனும், தான் நம்பி வந்த நாடார் சமுதாய வாக்கினை தனக்கு எதிராக திருப்பி விட முயலும் ஆளுங்கட்சியின் மூவ்களை நொறுக்கும் எண்ணத்துடனும் நொடிக்கு நொடி பதறிப் பதறி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் கனி. ஆனால் அவரை சொந்தக் கட்சி வி.ஐ.பி.க்களே ‘இவங்களே தோக்கடிச்சுடுவாங்களோ!’ என்று பதறிக் கிடக்கிறார். அந்தளவுக்கு மாஜி அமைச்சர் கீதாஜீவன், மாஜி அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாஜி எம்.பி. ஜெயதுரை ஆகியோருக்குள் மிக கடுமையான சண்டை நடப்பதுதான்.

 

சமீபத்தில் காலையில் தேர்தல் பணியாக வெளியே செல்ல மாடியில் தயாராகிக் கொண்டிருந்தாராம் கனிமொழி. அப்போது கீழே மேற்படி மூன்று வி.ஐ.பி.க்களும் இருந்திருக்கிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னதை மாஜி எம்.பி. ஜெயதுரை கேட்காமல் பேச. ‘என்னய்யா அனிதா அண்ணாச்சியையே எதுத்து பேசுறீயா?’ என்று அனிதாவின் கையாட்கள் எகிறியுள்ளனர். உடனே  ஜெயதுரையோ ‘நான் மாஜி எம்.பி. எனக்கு உத்தரவு போட நீங்க யாரு?’ என்று கேட்க, ‘ உன் காரை நொறுக்கிடுவேன்’ என்று அனிதா சீற, ‘எங்கே கை வைங்க பாப்போம், உங்க கார் இருக்காது’ என்று பதிலுக்கு அவர் பாய்ந்திருக்கிறார். உடனே மாஜி அமைச்சர் கீதாஜீவன் உள்ளே புகுந்து அமைதிப்படுத்த முயன்றிருக்கிறார். 

உடனே அவர் மேலே பாய்ந்த அனிதா ‘உன் அப்பன் பெரியசாமி என்னை கொல்லப்பார்த்தாரு. நீயெல்லாம் சமாதானம் பேசுற.’ என்று எகிற, கீதாவின் தம்பி ஜெகனோ ‘வார்த்தய அளந்து பேசு இல்லேன்னா நான் கெட்டவனாகிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். இந்த அதிரடி கூத்துக்களை மேலிருந்து பார்த்துக் கொண்டேதான் இருந்தாராம் கனிமொழி.

ஆனால் தடுக்க முயலுவுமில்லை, முடியவும் முடியாது. தன் கண்முன்னேயே இப்படி தெருச்சண்டை போட்டுக் கொள்ளும் இவர்களே தன் தோல்விக்கு ஒப்புதல் கொடுத்து விடுவார்களோ? உட்கட்சி ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு இல்லேன்னா எங்கே உருப்பட! என்பதுதான் கனிமொழியின் பெரும் வருத்தமாக இருக்கிறது.

click me!