தேர்தலுக்கு தயாராகிவிட்ட மு.க. ஸ்டாலின்... முதல் கட்சியாக தேர்தல் பொதுக்கூட்டங்களை அறிவித்த திமுக..!

By Asianet TamilFirst Published Oct 30, 2020, 9:12 AM IST
Highlights

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தேர்தல் பொதுக்கூட்டங்களை திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் தேர்தலுக்கு 5 மாதங்களே உள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன. அதிமுகவில் நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்து, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளது.


கொரோனா வைரஸ் அரசியல் கட்சிகளை முடக்கிபோட்டுவிட, அரசியல் கட்சிகள் அதிலிருந்து மீள முடியாமல் இருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனாவின் வேகம் தமிழகத்தில் சற்று குறைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் மக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், யாத்திரைகள் என அரசியல் கட்சியினர் பிஸியாகி வருகிறார்கள்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்டதைத் தொடர்ந்து, ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் ‘2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்’ நெடைபெறும்.” என அறிவித்துள்ளது.


 இதன்படி பொதுக்கூட்டங்கள் நடக்கும் மாவட்டங்களையும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 1 முதல் 10 வரை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டங்கள் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களை முதல் கட்சியாக திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!