
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி பாஜக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நெல் உள்ளிட்ட 14 விளைபொருளுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 2014- ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக வந்த பிறகு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உற்பத்தி செலவை விட 50 முதல் 100 சதவீதம் விலை இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லுக்கு மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 58 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விலையை உயர்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேகதாது அணை பிரச்சினையில் அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் நிலைப்பாடு. மேகதாது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் பாஜக துணையாக நிற்கும். இதை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துபூர்வமாக உறுதி அளித்திருக்கிறோம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டி விட முடியாது. சட்டம் மிகத் தெளிவாகவே உள்ளது. மேகதாதுவைப் பொறுத்தவரை பாஜகதான் முதன் முதலில் கையில் எடுத்தது. தஞ்சாவூரில் பாஜகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோம். காவிரிக்கு கீழே வரக்கூடிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டவே முடியாது. தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும். தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கெளரவ நிதித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 100 சதவீதம் சிறு குறு விவசாயிகளுக்கு பிரதமரின் கெளரவ நிதித் தொகை சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
இது மாநில அரசின் வேளாண்மை துறையின் கையில்தான் உள்ளது. இதற்காக ஒரு சிறப்பு முகாமை ஏற்படுத்தி தமிழகத்தில் உள்ள ஒரு சிறு விவசாயிகூட விடுபடாமல் இருக்க முதல்வர் முயற்சி செய்ய வேண்டும். அரசியலை எல்லாம் தாண்டி முதல்வருக்கு எங்களுடைய வேண்டுகோளாக இதை வைக்கிறோம். முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். மூன்றாவது கட்சியாக வருவதற்கு யார் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்ளலாம். ஆனால், பாஜக முதல் கட்சியாக வருவதற்கு உழைத்து கொண்டிருக்கிறோம். ஊழல் தொடர்பாக முதல் பட்டியலை வெளியிட்டவுடன் வழக்கு போட்டு முடக்கலாம் என திமுக தப்புக் கணக்குப் போடுகிறது. அப்படி வழக்குப் போட்டால் அடுத்த பட்டியல் இதைவிட 10 மடங்கு அதிகமாக வெளியிடுவோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.