திருந்துங்கள்... இல்லையேல் திருத்தப்படுவீர்கள்... திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2019, 2:26 PM IST
Highlights

திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 
 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,’’நீங்கள் கூறிய சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்ற உறுதியை பொதுக்குழு மூலமாக எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன். அதேபோலத்தான், தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும், மற்ற நிர்வாகிகளாக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


 
யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்து விடக்கூடாது. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குக்  கீழ் பணியாற்றுபவர்களை, தங்களுக்குக் கீழ்தான் என்று நினைத்துவிடக்கூடாது. அனைவருக்கும் பதவிகள் வழங்க முடியாது. சில ஆயிரம் பேர்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக முடியும். சில நூறு பேர்தான் செயற்குழு உறுப்பினர்களாக முடியும். நூறுக்கும் குறைவானவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும்.   சில 10 பேர்கள் தான் தலைமைக் கழக நிர்வாகிகளாக முடியும். அதற்காக, இவர்கள் மட்டுமே கழகமா? இந்தப் பதவியைத் தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்களால்தான் கழகம் உறுதியாக நிற்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.


 
அவர்களால்தான் நீங்கள் இந்த அரங்குக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர்களால்தான் நானும் இந்த மேடையில்  நின்று கொண்டிருக்கிறேன். இந்த எண்ணத்தை யாரும் எந்தச் சூழ்நிலையிலும் மறக்காமல் இருந்தால் திமுகவை வீழ்த்துவதற்கு எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் முடியாது. எத்தனை பெரிய மாளிகையையும் கட்டலாம். அடித்தளம் சரியாக அமையவேண்டும்.  அத்தகைய அடித்தளம் தான் தொண்டர்கள்.  அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களது ஆலோசனைகளைக் கேளுங்கள். அவர்களிடம் களநிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்களோடு சில நிமிட நேரம் செலவிடுங்கள். அவர்கள் மூலமாகத் தான் உண்மையான செய்திகளை முழுமையாக அறிய முடியும்.
 
நகரச் செயலாளர்களுக்கு அந்த நகரம் அத்துப்படியாக இருக்க வேண்டும். ஒன்றியச் செயலாளர்களுக்கு அந்த ஒன்றியம் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்களுக்கு அந்த மாவட்டமே மனப்பாடமாக இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிப் பணி ஆற்றாமல், அனைத்து நேரங்களிலும் கட்சிப் பணி ஆற்றிட வேண்டும்.

இந்த மாதம் இந்தப் பகுதி, இந்த வாரம் இந்தப் பகுதி என்று திட்டமிட்டு பணியாற்றினால், நம்மை வீழ்த்த  யாராலும்  நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான், ஊராட்சிக் கழகங்களை கிளைக் கழகங்களாக மாற்றும் வகையில்  கழகத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் 12,500 ஊராட்சிகளுக்கு ஊராட்சி செயலாளர்களை வைத்திருந்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தினோம். நம் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அது ஒரு காரணம். அங்கு சென்ற பிறகு நிறைய உண்மைகள் தெரியவந்தன. ஊராட்சி என்பது மிகப்பெரிய ஊர்கள் கொண்டது. இதனை ஒரு செயலாளர் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கிளைகளாகப் பிரித்திருக்கிறோம்.


 
இதுவரை 12,500  ஊராட்சி செயலாளர்கள் இருந்தார்கள். இனிமேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப்போகின்றன. அதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக்கழகச் செயலாளர்கள் வரப்போகிறார்கள். அதன்மூலம் மக்களோடு மக்களாக ஒன்றாக இணைந்து நெருக்கமாகப்  பணியாற்றிட முடியும். 30, 40 வருடங்களுக்கு முன்பு எப்படிப் பணியாற்றினோமோ, அதுமாதிரி பணியாற்றிட முடியும்.
 
எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றியைப் பற்றி நான் பெருமை பொங்கச் சொன்னேனோ, அதேபோல் நமக்கு இருக்கும் வருத்தத்தையும் சொல்லியாக வேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆளும் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையைப் பயன்படுத்தி பணப் பட்டுவாடா செய்ததால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கழகத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும்.
 
மாநாடு போடுகிறோம். பொதுக்கூட்டம் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். சட்டமன்றத்தில் வாதாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறோம்.  இவைகளெல்லாம் மக்களுக்காக. கட்சிக்காகச் செய்யவேண்டியது என்பது, அமைப்பை பலப்படுத்துவது, கிளைகளை உருவாக்குவது,  உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, மக்களோடு மக்களாக நிர்வாகிகள் இரண்டறக் கலந்து பழகுவது. அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்வது; தலைமை கழகத்தோடு மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது; இத்தகைய கட்டமைப்பில்தான் கழகம் நிற்கிறது. அப்படி நிற்கும் கழகம்தான் வெற்றி பெறும்’’என அவர் தெரிவித்தார்.
 

 

click me!