உதயநிதி பேச்சை மதிக்காத திமுகவினர்.? அமைச்சர் பதவி வழங்க மீண்டும் தீர்மானம்.. தீர்மானங்கள் தொடருமா.?

By Asianet TamilFirst Published May 31, 2022, 10:47 PM IST
Highlights

எனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் கட்சி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறிய ஒரு நாள்கூட ஆகாத நிலையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் திமுகவினர். 

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் தலையில் திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 'உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும்' என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருந்த நிலையில் இந்தத் தீர்மானத்தை திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்திருந்தார். தர்மசங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தாலும், அன்பில் மகேஷைத் தொடர்ந்து பிற மாவட்ட செயலாளர்களும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பிலும் அதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருச்சி மத்திய மாவட்ட  திமுக சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கே.என். நேருவின் ஆதரவாளரான மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், “ஜூன் 3ம் தேதி, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கட்சிக் கொடிகள் ஏற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றி, ஓராண்டு கால ஆட்சியை நிறைவுச் செய்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டும். அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றும் ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதேபோல தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!