மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரவீந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி திமுக எம்எல்ஐக்கள் மற்றும் மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஆர் தோட்டத்தில் இறந்த சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை என்ற ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அந்த நிலங்களை சுற்றி நான்கு புறமும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்ததாகவும்,அதனை மீட்கும் முயற்சியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டபோது,வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
இந்த நிலையில் வனத்திற்குள் 27ம் தேதி தப்பி ஓடியதாக கூறப்பட்ட சிறுத்தை கடந்த 28-ம் தேதி உயிரிழந்து விட்டதாகவும் அதனை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின், உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து ரவீந்திரநாத் - தின் தோட்டத்தில் தற்காலிகமாக "ஆட்டுக்கிடை"அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தான் சிறுத்தையை கொன்றதாக கூறி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தோடர்பாக தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஓபிஆரை கைது செய்ய வேண்டும்- திமுக
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பி ரவிந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்,திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனுவால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
7 நிமிடங்களில் வரும் 108 ஆம்புலன்ஸ்..! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி