தி.மு.கவில் கடும் நெருக்கடி! மன உளைச்சலில் கனிமொழி!

By Selva KathirFirst Published Jan 11, 2019, 9:39 AM IST
Highlights

தி.மு.கவில் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தி.மு.கவில் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வரும் ஜூலை மாதத்துடன் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடிவடைய உள்ளது. முதல் முறை பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் கலைஞர் மிகுந்த சிரமத்திற்கு இடையே கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் தி.மு.கவின் டெல்லி முகமாக கனிமொழி விளங்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். அதற்கான முயற்சிகளில் கனிமொழி தீவிரம் காட்டி வந்தார்.

 

மேலும் எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்கிற கனிமொழியின் ஆசை தற்போது வரை நிராசையாகவே இருக்கிறது. கலைஞர் உடல் நிலை குன்றியதுமே டெல்லியில் தி.மு.கவின் முகமாக கனிமொழியை அடையாளப்படுத்துவதை ஸ்டாலின் குறைக்க ஆரம்பித்தார். கூட்டணி முதல் கட்சியின் நிகழ்ச்சிகள் வரை அனைத்து டெல்லி விவகாரங்களையும் கவனிக்க தனது மருமகன் சபரீசனை அமர்த்தினார் ஸ்டாலின். துவக்கத்தில் இந்த விஷயத்தில் தடுமாறிய சபரீசன் பின்னர் அசத்த ஆரம்பித்துவிட்டார். 

அதிலும் கலைஞர் சிலை திறப்பிற்கு சோனியாவை சபரீசன் அழைத்து வந்தது தான் ஸ்டாலினை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது. இதனை தொடர்ந்து சபரீசனையே தி.மு.கவின் டெல்லி பிரதிநிதியாக்கும் வகையில் ஸ்டாலின் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதன் முதல்கட்டமாக கனிமொழியை டெல்லி அரசியலில் இருந்து திரும்ப அழைக்க முடிவெடுத்துள்ளார். இதனால் வரும் ஜூலை மாதத்துடன் எம்.பி பதவிக்காலம் முடியும் கனிமொழி மீண்டும் எம்பியாக வாய்ப்பு இல்லை. 

ராஜ்யசபா எம்.பியாக இல்லை என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தூத்துக்குடி தொகுதியை ம.தி.மு.கவில் இருந்து தி.மு.கவில் இணைந்த ஜோயலுக்கு கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனிமொழியை எம்.எல்.ஏவாக்கி லோக்கல் அரசியலில் ஈடுபடுத்தி சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு திட்டமும் ஸ்டாலினுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் முதலில் வதந்திகள் என்று கனிமொழி கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் அதன் பிறகு தி.மு.கவில் அரங்கேறும் சில விஷயங்கள்.

கனிமொழியை காயப்படுத்தும் வகையில் இருந்துள்ளது. இதனால் தான் அண்மையில் தனது பிறந்த நாளை கூட கொண்டாட வேண்டாம் என்று கனிமொழி கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் நாடாளுமன்றத்தில் திருச்சி சிவாவுடன் மோதல், நண்பரான ஆ.ராசாவுடன் கருத்து வேறுபாடு என தவறான விஷயங்களில் கனிமொழி பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது. 

இதற்கும் கனிமொழியின் மன உளைச்சல் தான் காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கடந்த 12 வருடமாக டெல்லி அரசியலில் ஈடுபட்டு அத்தனை தேசிய, மாநில கட்சி நிர்வாகிகளுடனும் நெருக்கமாக கான்டாக்டுகளை வளர்த்து வைத்துள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பது தான் கனிமொழியின் நீண்ட கால ஆசை. ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தன்னை டெல்லி அரசியலில் இருந்து காலி செய்ய நடைபெறும் விஷயங்களால் மிகவும் நொந்து போய் உள்ளாராம் கனிமொழி.

click me!