இன்று கருணாநிதியின் வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா… முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்…

First Published Jun 3, 2017, 7:52 AM IST
Highlights
DMK Chief karunanidhi 94th birth day function in chennai


திமுக  தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவும், 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில்  ராகுல்காந்தி, நிதிஷ்குமார் உள்பட 9 முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக  தலைவர் கருணாநிதி, திருவாரூரை அடுத்த  திருக்குவளையில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி பிறந்தார். அவரது தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம் அம்மையார் ஆவர்.

கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது 14-வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரி சாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தார்.


இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் கருணாநிதி அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.



அதன்பின்னர், தி.மு.க. வேட்பாளராக 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதி,  1967 மற்றும் 1971-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதி,  1977 மற்றும் 1980-ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதி, , 1989 மற்றும் 1991-ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதி,  1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதி, ,  2011 மற்றும் 2016-ம் ஆண்டு திருவாரூர் தொகுதி  போட்டியிட்டு வெற்றி பெற்று, தொடர்ந்து 60 ஆண்டுகள் கருணாநிதி எம்எல்ஏ.வாக இருந்து வருகிறார்.



அறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பு ஏற்றார். அதன் பின்னர், 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆண்டுகளில் என மொத்தம் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.மேலும்  கடந்த 40 ஆண்டுகளாக  தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி இருந்து வருகிறார்.



தி.மு.க. தலைவர் கருணாநிதி, சட்டசபையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவரது சட்டசபை வைர விழாவையும், 94-வது பிறந்த நாள் விழாவையும் சேர்த்து பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

அதன்படி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான மேடை சட்டசபை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.



விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின்  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

click me!