
முதல்வர் குறித்த வதந்திகளை பரப்ப உரிமை கிடையாது. என சமுக வலைதளங்களை முடக்க தடை விதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் திமுகவில் 20 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக உள்ளேன். கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டேன். முகநூல், டூவிட்டர் மூலமாக திமுகவினர் மற்றும் நண்பர்கள் மத்தியி்ல் பிரசாரம் செய்து வருகிறேன்.
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி எனக்கு வாட்ஸ் ஆப் மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன். அதில் தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பதிவு என்னுடைய அசல் பதிவு அல்ல. வேறு ஒருவரிடமிருந்து வந்ததை நான் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
எதிர்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியை விமர்சிப்பது எங்களது கடமை. ஆனால் அதேநேரம் முதல்வர் நல்ல முறையில் குணமடைந்து மீண்டும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை.
இருப்பினும் எனது முகநூல் பதிவை மறுநாளே அழித்துவிட்டேன். இந்த நிலையில் பொள்ளாச்சி அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்யவும், என்னுடைய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
இதே போன்று திமுகவினர் பலரின் சமூக வலைதள பக்கங்களை முடக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது. எனவே, எங்களை கைது செய்வதற்கும், எங்களின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கும் போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும்.
இதேபோன்று, பொள்ளாட்சி அமைப்பாளர் ராஜீவ் காந்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமுக வளைய தள கணக்குகளை முடக்குவதை தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர் வில்சன், அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை, கருத்துரிமை வழங்கி இருக்கிறது என பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டினார். மேலும் மனுதாரருக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்ட என்ற எண்ணம் இல்லை.
சமுக வலை தளங்களில் வந்த செய்தியை தான் அவர் பகிர்ந்துள்ளார். அதனை அவர் உடனடியாக நீக்கிவிட்டார். இருப்பினும் தொடர்ந்து போலீசார் மனுதாரரை துன்புருத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், முதல்வர்களின் மீது வதந்தியை பரப்பியவர்கள் மீது சட்டத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யாரை துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார் .
அப்போது நீதிபதி குறுக்கீட்டு, அரசியலமைப்பு வழங்கிய கருத்துரிமை, பேச்சுரிமை ஆகிய சுதந்திரம் அனைவருக்கும் உண்டு, அதே சமயம் தனிப்பட்ட மனிதர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவர்களின் விமர்சனம் அமைந்து விடகூடாது.
இரண்ரையும் சமமாக பார்க்கப்பட வேண்டும். அவர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை தனி மனிதர்களை பாதிக்க கூடாது. முதல்வரின் உடல் நிலையை பற்றி வதந்தி பரப்ப யாருக்கும் உரிமை இல்லை.
அதே சமயம் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் பேஸ்புக் உள்ளிட்டவற்றை தடை விதிக்க கூடாது. என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.